முடங்கியது மும்பை: பெருமழையால் 5 பேர் உயிரிழப்பு, கடலோர மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’!

மும்பையில் 100 மில்லி மீட்டரைத் தாண்டி தீவிரமடையும் பருவமழையால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Mumbai rain-Red Alert
Published on

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று கனமழை மேலும் தீவிரமடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய கடலோர மாவட்டங்களுக்கும், புனே, சதாரா மலைப்பகுதிகளுக்கும் அதிதீவிர மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த பருவமழை உக்கிரம் வரும் ஜூலை 7 ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் மழையினால் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் மும்பை, தானே மற்றும் புனே ஆகிய பகுதிகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக செம்பூர் பகுதியில் பலத்த காற்றினால் பள்ளிப் பேருந்து மீது மரம் விழுந்த விபத்தில் 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவமும், திறந்திருந்த சாக்கடை மேன்ஹோலில் விழுந்து முதியவர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவமும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகரின் உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் அலட்சியமே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மும்பையின் கிழக்குப்புற புறநகர் பகுதிகளான விக்ரோலியில் 143 மி.மீ, கட்கோபரில் 136.4 மி.மீ மற்றும் செம்பூரில் 127.6 மி.மீ எனப் பல இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பெருமழை பதிவாகியுள்ளது.

தாழ்வான பகுதிகளான தாதர், பரேல், ஹிந்த்மாதா, அந்தேரி மற்றும் கோரேகான் ஆகிய இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. மேலும், தஹிசர் மற்றும் கந்தர்படா இடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பை மெட்ரோ 2A ரயில் சேவைகள் சுமார் 90 நிமிடங்கள் வரை பாதிக்கப்பட்டு பின்னர் சீரமைக்கப்பட்டன.

உள்ளூர் புறநகர் ரயில்களும் வழக்கமான நேரத்தை விட தாமதமாகவே இயக்கப்பட்டு வருகின்றன. கனமழை எச்சரிக்கை மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் பாதுகாப்பிற்காக மும்பை, தானே மற்றும் கல்யாண் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரஹன்மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளதுடன், அவசர உதவிகளுக்கு 1916 என்ற பிரத்யேக உதவி எண்ணையும் தாராளமாகப் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்த அதீத மழையினால் மும்பைக்குக் குடிநீர் வழங்கும் 7 ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருவது மட்டுமே தற்போதைய ஒரே ஆறுதலான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com