ஐபிஎல் 2026: சென்னை சேப்பாக்கத்தில் இன்று பஞ்சாப் கிங்சுடன் மோதும் சி.எஸ்.கே

சேப்பாக்கத்தை மீண்டும் தங்களது கோட்டை என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணியினர் இருக்கிறார்கள்.
ஐபிஎல் 2026: சென்னை சேப்பாக்கத்தில் இன்று பஞ்சாப் கிங்சுடன் மோதும் சி.எஸ்.கே
Published on

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

கடந்த ஆண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனையும் மோசமாகத் தான் தொடங்கி இருக்கிறது. கவுகாத்தியில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 127 ரன்னில் அடங்கியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே உள்ளிட்டோர் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. மூத்த வீரர் டோனி பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆடவில்லை. இன்றைய ஆட்டத்திலும் அவர் விளையாட மாட்டார் என்றாலும் அணியினருடன் இருந்து உற்சாகப்படுத்துவார். நேற்று பயிற்சியின்போது வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

தசைப்பிடிப்பால் முதல் ஆட்டத்தில் ஆடாத அதிரடி 'இளம் புயல்' டிவால்ட் பிரேவிஸ் பயிற்சி மேற்கொண்டுள்ளார். ஆனாலும் அவர் ஆடுவது சந்தேகம் தான். மொத்தத்தில் இளம் வீரர்கள் நிறைந்துள்ள சென்னை அணி உள்ளூர் சூழலை நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியம்.

கடந்த ஆண்டில் சென்னை அணி சேப்பாக்கத்தில் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்றது பெரும் பின்னடைவாக அமைந்தது. உள்ளூரில் பெரும்பாலான ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறிக்கும்போது தான் 'பிளே-ஆப்' வாய்ப்பில் நீடிக்க முடியும். எனவே சேப்பாக்கத்தை மீண்டும் தங்களது கோட்டை என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணியினர் இருக்கிறார்கள்.

பஞ்சாப் கிங்ஸ் அணி மிகவும் பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. தொடக்க ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை தோற்கடித்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், கனோலி, பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், மார்கோ யான்சென், யுஸ்வேந்திர சாஹல் என அந்த அணியில் நட்சத்திர வீரர்களுக்கு பஞ்சமில்லை.

இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு மோதியுள்ளன. இதில் இரு அணியும் தலா 16-ல் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரத்தில் சென்னை மைதானத்தில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த 9 ஆட்டங்களில் 4-ல் சென்னையும், 5-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு பஞ்சாப்புக்கு எதிராக கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும் சென்னை அணி சறுக்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com