ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் மீண்டும் நோட்டீஸ்| Chief election commissioner

ஏப்ரல் 18 அன்று மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டுத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசிய கருத்துகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் புகார் அளித்திருந்தன.
ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் மீண்டும் நோட்டீஸ்| Chief election commissioner
Published on

தேர்தல் ஆணையம் பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாஜகவின் வாக்கு வங்கிக்காக எஸ்ஐஆர் நடைமுறையின் மூலம் வாக்கு திருட்டுக்கு உடந்தையாக இருப்பதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் தொடர்ந்து சாடி வருகின்றனர்.

இந்நிலையில் 5 மாநில தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதில் தேர்தல் ஆணையர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்யக்கோரி பாராளுமன்றத்தில் நோட்டீஸ் வழங்கியுள்ளன.

ஏப்ரல் 18 அன்று மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டுத் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசிய கருத்துகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் புகார் அளித்திருந்தன.

அந்தப் புகாரின் மீது ஞானேஷ் குமார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் கூட அனுப்பவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளன.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகரிகா கோஷ் ஆகியோர் சமர்ப்பித்த இந்த நோட்டீஸில், ஞானேஷ் குமாருக்கு எதிராக 9 குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒரு ஆணையரை நீக்கக் கோரும் நோட்டீஸைத் தாக்கல் செய்ய 50 எம்பிக்களின் ஆதரவு போதும் என்ற நிலையில், 73 எம்பிக்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதற்கு முன்னதாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட இதே போன்ற நோட்டீஸ்கள், Constitutional Misconduct என்ற பிரிவில் வராது என்று கூறி சபாநாயகரால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இருப்பினும், புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீண்டும் இந்த விவகாரத்தைப் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com