சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்

இன்று அதிகாலை சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்
Published on

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதனால் கோவில் நகரம் என மதுரை மாநகரம் அழைக்கப்படுகிறது.

திருவிழா நகரமாக உள்ள மதுரையில் ஆண்டுதோறும் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

குறிப்பாக இரவு நடைபெறும் சாமி ஊர்வலத்தை காண பல்லாயிரக்கணக்கானோர் மாசி வீதிகளில் திரளுகின்றனர். இதனால் ஒரு வார காலமாகவே மதுரை நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதனால் கோவில் நகரம் என மதுரை மாநகரம் அழைக்கப்படுகிறது.

திருவிழா நகரமாக உள்ள மதுரையில் ஆண்டுதோறும் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

குறிப்பாக இரவு நடைபெறும் சாமி ஊர்வலத்தை காண பல்லாயிரக்கணக்கானோர் மாசி வீதிகளில் திரளுகின்றனர். இதனால் ஒரு வார காலமாகவே மதுரை நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.

சித்திரை திருவிழாவில் நேற்று முன்தினம் மதுரை நகரில் பட்டத்து பேரரசியாக மீனாட்சி அம்மன் பொறுப்பேற்று கொண்ட பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று அஷ்டதிக்கு பாலகர்களை வெல்லும் திக்குவிஜயம் விமரிசையாக நடந்தது.

சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பாக இன்று மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.

கோவிலுக்குள் உள்ள வடமேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மேடை 10 டன் நறுமண மலர்கள், வெட்டிவேர் மற்றும் பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இந்திரலோகம் போன்று காட்சியளித்தது.

காலை 8.10 மணிக்கு முதலாவதாக திருக்கல்யாண மேடைக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் வருகை தந்தனர். அதனை தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளினர்.

அதன் பின்னர் திருக்கல்யாண வைபவங்கள் வேத மந்திர முழக்கங்களுடன் தொடங்கியது. மீனாட்சி அம்மனின் வலதுபுறம் பவளக்கனிவாய் பெருமாளும், சுந்தரேசுவரரின் இடதுபுறம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி-தெய்வானையும் எழுந்தருளினர்.

மணப்பெண்ணான மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி, முத்துக் கொண்டை, தங்க கிரீடம், மாணிக்க மூக்குத்தி மற்றும் தங்க காசு மாலை, பச்சைக் கல் பதக்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்திருந்தார். சுவாமி சுந்தரேசுவரர் பட்டு வஸ்திரம், பவளங்கள் பதித்த கிரீடம், வைரம் பதித்த மாலைகள் அணிந்திருந்தார். பிரியாவிடை மஞ்சள் பட்டு அணிந்திருந்தார்.

திருக்கல்யாண நிகழ்வு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. மணமேடையில் அக்னி வளர்க்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்கப் பட்டது. மேலும் சங்கல்பம், கணபதி ஹோமம், புண்ணியாக வாசனம், பஞ்ச காவியம் நவதானியமிடும் பாலிகா பூஜை நடந்தது.

அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு காப்பு கட்டுதல் நடத்தப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் மணப்பட்டு சாற்றும் நிகழ்வு நடைபெற்றதையடுத்து கோவில் சார்பில் சுந்தரேஸ்வரருக்கு பட்டு பீதாம்பரமும், அம்மனுக்கு பட்டுச் சேலைகளும் சாற்றப்பட்டது. சுந்தரேசுவரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், மீனாட்சி அம்மனுக்கு பட்டுப்புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன.

அதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து பவளக்கனிவாய் பெருமாள், தங்கை மீனாட்சியை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மிதுன லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேத

மந்திரங்கள் முழங்க, மேள வாத்தியங்கள், சங்குகள் விண்ணதிர மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.

பின்னர் சுவாமி பிரதிநிதியான சிவாச்சாரியார் செந்தில், அம்மன் பிரதிநிதியான சிவாச்சாரியார் பாண்டிதுரை ஆகியோர் இருவரும் முதலில் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் சுந்தரேசுவரராக வேடமணிந்திருந்த பட்டர், வைரக்கல் பதித்த திருமாங்கல்யத்தை மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தார்.

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வை தொடர்ந்து சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு தீப ஆராதனைகள் காட்டப்பட்டது. திருக்கல்யாணத்தின்போது மட்டுமே அம்மன் உற்சவத்திற்கு தங்க அங்கி அணிவிக்கப்படும்.

அப்போது பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரரை திருமண கோலத்தில் தரிசனம் செய்தனர். மேலும் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் தாங்கள் கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சரடை மாற்றி கொண்டனர். திருமண நிகழ்ச்சியை கோவிலுக்குள் 12 ஆயிரம் பக்தர்களும் மற்றும் சித்திரை வீதி, மாசி வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த 20 எல்.இ.டி. திரைகள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கண்டுகளித்தனர்.

சுவாமிகள் திருக்கல்யாணம் நடந்தபோது, கோவிலின் உள்ளேயும், வெளிபுறத்திலும் திரண்டிருந்த பெண்கள் புதுத்தாலி மாற்றிக்கொண்டனர். திருக்கல்யாணம் முடிந்த பின்பு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். பக்தர்களுக்கு காட்சி அளிப்பதற்காக சுவாமியும், அம்மனும் பழைய கல்யாண மண்டபத்தில் இன்று முழுவதும் எழுந்தருளி இருப்பார்கள்.

விழாவை முன்னிட்டு மதுரை சேதுபதி பள்ளியில் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்பட்டது. 5 ஆயிரம் கிலோ அரிசியில் 12 டன் காய்கறியுடன் 1 லட்சம் பக்தர்களுக்கு கற்கண்டு சாதம், வெண் பொங்கல், வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், பொறியல், வடை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. கல்யாண விருந்து சாப்பிட்ட பக்தர்கள் திருமண மொய் எழுதினர்.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்க்க வந்திருந்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அபிஷேக் தீக்சித் மேற்பார்வையில் 5 எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருவிழாவில் இன்று இரவு சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கிலும் மாசி வீதிகளில் வீதி உலா வருவார்கள். அதனை காண ஆயிரக்கணக்கானோர் திரளுவார்கள். நாளை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com