வங்காளதேசத்தில் மாணவர்கள் நடத்திய NCP பேரணியில் பயங்கர குண்டுவெடிப்பு-3 பேர் படுகாயம்!

கடந்த 2024 ஆகஸ்ட் 5 அன்று மக்கள் மற்றும் மாணவர் புரட்சிக்குப் பிறகு ஷேக் ஹசீனா பிரதமர் பதவியைத் துறந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
Bangladesh bombblast
Published on

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவுக்கு அருகே உள்ள சாவார் பகுதியில், புதிதாகத் தொடங்கப்பட்ட 'தேசிய குடிமக்கள் கட்சி' நடத்திய பேரணியில் நேற்றிரவு பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவாரில் பதற்றம்:

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்த்தப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாணவர் அமைப்புகளால் நாடு தழுவிய அளவில் 'ஜூலை பேரணி' திட்டமிடப்பட்டிருந்தது.

இதன் முதல் நாளான திங்கட்கிழமை இரவு சுமார் 9:45 மணியளவில், சாவார் தானா ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் பேரணிக்குப் பிந்தைய பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

அப்போது அங்கிருந்த மேடைக்கு அருகே பயங்கரவாதிகள் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்ததாக NCP கட்சி தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2024 ஆகஸ்ட் 5 அன்று மக்கள் மற்றும் மாணவர் புரட்சிக்குப் பிறகு ஷேக் ஹசீனா பிரதமர் பதவியைத் துறந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாணவர் போராட்டத்தின் நினைவாகவும், பின்வரும் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஜூலை பேரணி நடத்தப்பட்டது.

அதில், நாட்டில் பொது வாக்கெடுப்பை அமல்படுத்துதல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், கடுமையான மின்சார பற்றாக்குறைக்கு தீர்வு காணுதல், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியைக் கட்டுப்படுத்துதல், நாட்டின் எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்துதல் போன்ற காரணங்கள் வலியுறுத்தப்பட்டது.

ஷேக் ஹசீனா நாடு கடத்தல் விவகாரம்:

இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் வங்காளதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை முறைப்படியான சட்டப் பூர்வ வழிகளில் வங்காளதேசத்திற்கு நாடு கடத்தக் கோரும் டாக்காவின் அதிகாரப்பூர்வ கோரிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து சாவார் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, குண்டுவெடிப்பிற்கு காரணமான பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்கான தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com