

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள படாபூர் கிராமத்தில், வெள்ளிக்கிழமை அன்று தாஹிபரா என்னும் உள்ளூர் உணவைச் சாப்பிட்ட 27 குழந்தைகள் உட்பட மொத்தம் 58 பேர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் உள்ளூர் வியாபாரியிடம் 'கட்டாக் தாஹிபரா' வாங்கிச் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தசரத்பூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஜாஜ்பூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 21 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 27 பேர் குழந்தைகள். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க அரசு மூன்று தனித்தனி குழுக்களை அமைத்துள்ளது என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் முகேஷ் மஹாலிங் தெரிவித்துள்ளார்.
“'தஹிபாரா' உட்கொண்டதே இதற்குக் காரணம் என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகளைச் சேகரித்து, அவற்றை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்” எனவும் தெரிவித்தார்.