

திருவண்ணாமலை:
திருவண்ணாமலையின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்லும். இங்கிருந்து விரைவு மற்றும் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் நிலையத்தில் தினமும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஸ்கள் இயக்கப்படாததால் கடந்த 45 நாட்களாக பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தப்படவில்லை. அனைத்து பஸ்களும் பணிமனைக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டுள்ளன. திருவண்ணாமலை பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படாததால் அங்கு பயணிகள் செல்லாத வகையில் தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சூழ்நிலையில் இன்று காலை கடலூர் மற்றும் திருக்கோவிலூர் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் அமைந்துள்ள பஸ் நிலைய கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அங்கு பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்து இடிந்து விழுந்த பகுதியை பார்வையிட்டனர். அந்த பகுதியில் மேலும் கட்டிடம் இடிந்து விழும் நிலையிலேயே உள்ளது. ஏராளமான பயணிகள் கூடும் பஸ் நிலையகட்டிடத்தை சரியாக பராமரிக்காததால் இடிந்து விழுந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.