நெல்லையில் பழிக்கு பழியாக நடந்த வாலிபர் கொலையில் 5 பேர் கைது

நெல்லையில் பழிக்கு பழியாக நடந்த வாலிபர் கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நெல்லை:

நெல்லை பழைய பேட்டை கண்டியப்பேரியை சேர்ந்த சகாதேவன் மகன் இசக்கி முத்து என்ற கணேச பாண்டியன் (வயது26). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று இசக்கி முத்து டீ குடிப்பதற்காக அம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது கோவில் அருகே சந்தேகப்படும் படி 5 பேர் நின்றனர். அவர்கள் இசக்கி முத்துவை பார்த்ததும் அரிவாளை எடுத்தனர்.

இதை பார்த்த இசக்கி முத்து கத்தியபடி தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி பிடித்து சரமாரி அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே இசக்கி முத்து ரத்த வெள்ளத் தில் பிணமானார்.

அப்போது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சிலர் கொலையாளிகளை விரட்டினர்.

அப்போது பழைய பேட்டை செக்போஸ்ட்டில் பாதுகாப்புக்கு நின்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், செல்வகுமார் ஆகியோர் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி வருவதை பார்த்து அவர்களை பிடிக்க விரட்டி சென்றனர். இதில் 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் தப்பி சென்று விட்டனர். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரை உடனடியாக ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் கண்டியப்பேரி பொதுமக்கள் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், பலியானவர் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பேட்டை ரோட்டில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகள் சென்று அவர்களை சமரசப்படுத்தினர். இதைத் தொடர்ந்து கலைந்து சென்ற பொதுமக்கள், கொலை செய்யப்பட்ட இசக்கி முத்து உடலை வாங்க மறுத்தனர்.

படுகொலையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமி‌ஷனர் தீபக் டாமோர் உத்தரவிட்டார். உடனடியாக சம்பவ இடத்துக்கு துணை கமி‌ஷனர் சரவணன், உதவி கமி‌ஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் இசக்கி முத்துவை பழிக்கு பழியாக வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்தது. அதன் விபரம் வருமாறு:-

கடந்த 2018-ம் ஆண்டு ஏரல் அருகே வினோத் மற்றும் அவரது நண்பர் ஆகிய 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொலையில் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்த கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணனை சிலர் வெட்டிக் கொலை செய்தனர். கண்ணனை கொலை செய்தவர்களில் கண்டியப்பேரி இசக்கி முத்து முக்கிய கொலையாளியாகும். அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளி வந்து கண்டியப்பேரியில் தங்கி இருந்தார்.

இதை அறிந்த கண்ணனின் தம்பி துரைமுத்து (25) பழிக்கு பழியாக இசக்கி முத்துவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினார். அதன்படி நேற்று தனது நண்பர்கள் 4 பேருடன் கண்டியப்பேரிக்கு வந்து இசக்கி முத்துவை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

கொலையாளிகளை பிடிக்க உதவி கமி‌ஷனர் சதீஷ் குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விமலன், காசிப் பாண்டியன், சாமி ஆகியோர் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் பெயர் நவீன் (19) என்றும், தாழையூத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் தப்பி ஓடியவர்கள் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்த துரை முத்துவின் நண்பர்கள் என்றும் தெரியவந்தது.

உடனடியாக தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் இன்று கொலையில் தொடர்புடைய மேலும் 4 பேர் சிக்கினர். அவர்கள் பெயர் விபரம் வருமாறு:-

துரைமுத்து (25) வெள்ளூர், சுபாஷ்(19) தாழையூத்து, லட்சுமணன் (25) மேலசெவல், முப்புடாதி (24) சங்கன் திரடு. பிடிபட்ட 5 பேர்களையும் இன்று போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது இவர்கள் பழிக்குப்பழியாக கொலை செய்ததை ஒப்புக் கொண்டு பரபரப்பு வாக்கு மூலம் அளித்தனர். இதில் கைதான துரைமுத்து அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது அண்ணன் கண்ணனை, இசக்கி முத்துவும் அவரது நண்பர்களும் வெட்டிக்கொலை செய்தது எங்களுக்கு மிகுந்த மன வேதனைய அளித்தது. இதனால் கண்ணன் கொலைக்கு காரணமான அனைவரையும் வெட்டிக் கொலை செய்ய முடிவு செய்தோம்.

இதன்படி கொலையாளிகள் குறித்து விசாரித்த போது, இசக்கி முத்து கண்டியப்பேரியில் இருப்பது தெரியவந்தது. இதனால் நானும் எனது நண்பர்கள் 4 பேரும் சம்பவ இடத்துக்கு சென்று திட்டமிட்டபடி கொலை செய்தோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீசார் கொலையாளிகளிடம் இருந்து கொலை செய்யபயன்படுத்தப்பட்ட அரிவாளை பறிமுதல் செய்தனர். கொலையாளிகள் 5 பேரையும் இன்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com