குஷ்பு நெல்லை வந்தபோது காங். அலுவலகம் பூட்டப்பட்டது குறித்து விசாரணை: திருநாவுக்கரசர்

குஷ்பு நெல்லை வந்தபோது காங். அலுவலகம் பூட்டப்பட்டது குறித்து விசாரணை: திருநாவுக்கரசர்

குஷ்பு நெல்லை வந்தபோது காங்கிரஸ் அலுவலகம் பூட்டப்பட்டது குறித்து விசாரணை திருநாவுக்கரசர் பேட்டி
Published on

நெல்லை:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தி.க. சார்பில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தின்படி நாளை மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் பங்கேற்கும். பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக ஏற்கனவே தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

ஏற்கனவே விலைவாசி உயர்வு, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் பஸ் கட்டண உயர்வு மேலும் அவர்களை பாதிப்படைய செய்துள்ளது. அரசுக்கு வருவாயை பெருக்க வேறு வழிகள் உள்ளன. மக்கள் மீது சுமை ஏற்படுத்த கூடாது. பஸ் கட்டண உயர்வு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையாக வருகிற 6-ந் தேதி சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் நடக்கவுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. வரவு- செலவை சமர்ப்பிக்கவேண்டிய அரசு ஐந்தாண்டு திட்டம் போல் பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளது. பா.ஜ.க. அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் தேர்தல் அறிக்கையை போல் தாக்கல் செய்துள்ளனர். இதில் சொல்லியுள்ள பல திட்டங்கள் ஓராண்டுக்குள் சாத்தியமாகாதது.

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி கண்டுள்ளது. இதுபோல் நடக்காமல் இருக்க அவர்கள் முன்கூட்டியே தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளனர். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து சட்டமன்ற கொறடா உத்தரவை மீறி இருந்தாலோ, கட்சியில் இருந்து வெளியேறியிருந்தாலோ அல்லது அதிக ஊதியம் பெரும் வகையில் உயர்பதவியில் இருந்தாலோ பதவி நீக்கம் சாத்தியமாகும்.

ஆனால் அரசியல் கட்சி தலைவர்களை விமர்சித்தாலே பதவி நீக்கம் என்பது சரியாக இருக்குமா என்பது தெரியவில்லை. என்றாலும் இந்த விவகாரம் குறித்து கோர்ட்டில் வழக்கு உள்ளதால் தற்போது எதுவும் கூற முடியாது. மத்திய பா.ஜ.க. அரசின் பினாமி அரசாக தமிழக அரசு உள்ளது. மக்கள் தேர்தலை எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தில் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் வர வாய்ப்புள்ளது. மத்திய பட்ஜெட்டை விமர்சிக்கும் துணை சபாநாயகர் தம்பிதுரை பதவி விலக வேண்டியதுதானே. மத்திய பா.ஜ.க. கூட்டணி பலகீனமாகி வருகிறது.

பா.ஜ.க.வுக்கு எதிரான வலுவான தலைமையாக காங்கிரஸ் தான் உருவாக முடியும். அண்டை மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சி நடந்தாலும் தமிழக மக்கள் நலன் என்பதே எங்கள் குறிக்கோள். அந்த வகையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து காவிரியில் தண்ணீர் திறந்து விடவேண்டும். காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினை போல் கருத்து வேறுபாடு உள்ளது.

குஷ்பு நெல்லை வருகையின் போது காங்கிரஸ் அலுவலகம் பூட்டப்பட்டதாக புகார்கள் எனக்கு வரவில்லை. இதுதொடர்பாக புகார்கள் வந்தால் விசாரணை நடத்தப்படும்.

தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்தும் வகையில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க ஜூலை 15 முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #thirunavukkarasar #congress 

X

Maalai Malar
www.maalaimalar.com