

நீலகிரி மாவட்டம் கூடலூரில் காங்கிரஸ் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். இதற்காக ஊட்டி வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
தலித் மக்கள் மீதான சரத்துக்களை நீர்த்து போகும் விதமாக நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்துத்துவா அமைப்புகள் மூலம் சிறுபான்மையினர், தலித்மக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது, இந்த சட்டத்தை நீர்த்து போக செய்தால் இவர்களின் தாக்குல் அதிகரிக்கும்
கூடலூரில் அனைத்து மக்களை இணைத்து ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது. தேயிலை விவசாயிகளுக்கு கிலோவிற்கு 30 ரூபாய் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செக்சன் 17 நிலங்கள், ஜென்ம நிலங்கள் பட்டா வழங்காமல் உள்ளதை கண்டிக்கிறேன். காவிரி நீர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் தீர்ப்புகள் மதிக்கப்படாமல் மத்திய அரசு மதிக்காமல் இருந்தால் மாநில அரசோ, மாவட்ட நிர்வாகமோ எதிர் காலத்தில் நீதிமன்ற தீர்பை மதிக்க கூட முடியாத நிலை ஏற்படும்.
ஒரு வாரகால கண்டன போராட்டத்திற்குப்பின் கவர்னரை சந்தித்து மனு கொடுக்கவுள்ளோம். உச்ச நீதிமன்ற தீர்பை நிறைவேற்றாமல் கர்நாடக அரசை விமர்சிக்க கூடாது. ஐ.பி.எல். போட்டிகள் தேவையா ? என்பது குறித்து அந்த அமைப்புதான் முடிவு செய்ய வேண்டும். தி.மு.க.- காங்கிரஸ் உறவு சுமூகமாக உள்ளது. தி.மு.க. கூட்டணியில் பலரும் இணைவார்கள். 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் நீக்கி இருக்ககூடாது. கோர்ட்டு உத்தரவு வந்ததும் இந்த ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.
சூரப்பா, வீரப்பா, கட்டப்பாக்களை துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவதை விட்டு முறைப்படி வேறுமாநிலத்தை சேர்ந்தவரை நியமித்திருக்க வேண்டும். இதனை காங்கிரஸ் கண்டிக்கிறது. காங்கிரசிற்குள் எந்த கோஷ்டி பூசலும் இல்லை.