

ஆற்காடு:
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ளது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு நீட் தேர்வு, மீத்தேன் உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய, மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியை தக்க வைப்பதர்க்கு பெறும்பான்மை பலம் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. அ.தி.மு.க.வின் செயல்பாட்டை பார்த்தால் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் வரலாம்.
அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. அதிக அளவில் உள்ளது. அதிமுகவின் பலத்தை குறைப்பதிலும், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதையே பா.ஜ.க செய்து வருகிறது.
சுயமாக செயல் படக்கூடிய அரசாக தமிழக அரசு இல்லை. பா.ஜ.காவின் பினாமி அரசாகவே உள்ளது. ராணிப்பேட்டையில் எரிவாயு குழாய் புதைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயத்த பணிகளை மக்கள் எதிர்க்க வேண்டும். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.
ஹரியானாவில் ஏற்பட்ட கலவரத்திற்கு தார்மீக பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
பேரறிவாளனுக்கு வழங்கியது போல் நளினி முருகனுக்கும் பரோல் வழங்க வேண்டும்.
சபா நாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்ற திவாகரனின் கருத்து எடப்பாடி பழனிசாமியின் அணியில் இருந்து தலித் சட்டமன்ற உறுப்பினர்களை பிரிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
கதிராமங்கலம் போராட்டத்தை மத்திய மாநில அரசுகள் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. ஸ்டாலின் சில மாதங்களில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்று கூறியுள்ள கருத்திற்க்கு எனக்கு மாற்று கருத்தில்லை. தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால் கவர்னர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு பாடத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.இருந்த போதிலும் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளையும் மாநில அரசின் கல்வி வாரியத்தில் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.