ஒக்கி புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்: திருமாவளவன்

தமிழகத்தில் ‘ஒக்கி’ புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
Published on

குமரி மாவட்டத்தில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று குமரி வந்தார். நாகர்கோவில் அருகே திருப்பதிசாரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும், சேதம் அடைந்த சாலையையும் பார்வையிட்டார்.

அதன் பிறகு மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் சரிவர நடைபெறவில்லை. திருப்பதிசாரத்தில் கால்வாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை சரிசெய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மக்களுக்கு மின்சாரம், குடிநீர், உணவு கிடைக்கவில்லை. அதிகாரிகள் இந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டு மக்களுக்கு தேவையான வசதிகளை விரைவில் செய்து தரவேண்டும்.


கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போதாது. எனவே மாயமாகிய மீனவர்களை கண்டுபிடிக்க கூடுதல் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்ப வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மந்தமாக நடக்கிறது. மீட்பு பணிகள் குறித்து அரசு எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. கேரளாவில் புயல், மழைக்கு உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ‘ஒக்கி’ புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். உயிரிழந்த மீனவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இலங்கையில் புயலால் காணாமல் போன மீனவர்கள் மற்றும் உயிரிழந்த மீனவர்களின் விவரங்களை இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதுபோல தமிழகத்தில் மாயமான மீனவர்கள் விவரங்களை அரசு வெளியிட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களை அதிகாரிகள் வெளியேற்றுவதாக கூறுகிறார்கள். முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதை விடுத்து அவர்களை வெளியே அனுப்புவது மனிதாபிமானமற்ற செயல். குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com