

தாய்லாந்து நாட்டில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது.
இதற்கிடையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் யிங்லக் ஷினவத்ராவின் பிரதமர் பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தக மந்திரி நிவாட்டம்ராங் பூன்சாங் நியமிக்கப்பட்டார். ஆனால், நாட்டில் வலிமையான தலைமை இல்லாததால் பெரும் அரசியல் குழப்பம் எழுந்தது.
இதையடுத்து அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார். நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறிய நிலையில் அங்கு ராணுவ ஆட்சியே தொடர்ந்தது.
பொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித்தார். அதனைதொடர்ந்தது பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 500 உறுப்பினர்களை கொண்டு தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த மார்ச் 24-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பொதுத்தேர்தல் என்பதால் அரசியல் கட்சியினரிடமும், தாய்லாந்து மக்களிடமும் இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று தாய்லாந்து இளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்காக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன்னாள் பிரதமர்கள் யிங்லக் ஷினவத்ரா, தாக்ஷின் ஷினவத்ரா ஆகியோருக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட புதிய கட்சியான தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு (தாய் ரக்சா சார்ட்) கட்சியின் வேட்பாளராக அவர் களமிறங்கினார். உபோல்ரட்டனா மஹிடோல் முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜின் கடைசி மகளும், தற்போதைய மன்னர் மஹா வஜ்ரலோங்கோர்னின் மூத்த சகோதரியும் ஆவார்.
இதனால் இந்த பொதுத்தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்ட நிலையில் இளவரசி உபோல்ரட்டனா பிரதமர் பதவிக்கு போட்டியிட கூடாது என தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சிக்கு மன்னர் மஹா வஜ்ரலோங்கோர்ன் நேற்றிரவு உத்தரவிட்டார்.
மன்னரின் உத்தரவுக்கு மதிப்பளித்தும், அரண்மனைக்கு விசுவாசமாகவும் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இளவரசி உபோல்ரட்டனா திரும்பப்பெறப்படுவதாக தாய்லாந்து மக்கள் பாதுகாப்பு கட்சி இன்று அறிவித்துள்ளது.