புதுடெல்லி:
டெல்லி அருகே உள்ள நொய்டா கவுர் சிட்டியை சேர்ந்தவர் அஞ்சலி அகர்வால் (வயது 42). இவருக்கு 15 வயதில் மகனும், கனிகா (12) என்ற மகளும் இருந்தனர்.
மகன் சரியாக படிப்பது இல்லை. இதனால் தாயார் அஞ்சலி அகர்வால் அவனை அடிக்கடி கண்டித்து வந்தார். சம்பவத்தன்று இரவும் அவன் செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்தான். எனவே, அஞ்சலி அகர்வால் திட்டினார்.
பின்னர் அனைவரும் இரவில் படுத்து தூங்கினார்கள். தாயார் திட்டியது மகனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே, தாயை கொன்றுவிட முடிவு செய்தான்.
படுக்கையில் இருந்து எழுந்த அவன் கிரிக்கெட் மட்டையை எடுத்து வந்து தூங்கிக் கொண்டு இருந்த அஞ்சலி அகர்வாலை தாக்கினான்.
அப்போது சத்தம் கேட்டு எழுந்த தங்கை கனிகாவையும் தாக்கினான். இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். உடனே 2 கத்திரி, ரொட்டி வெட்டும் கத்தி ஆகியவற்றை எடுத்து வந்து இருவரையும் சரமாரியாக குத்தினான். இதில் அவர்கள் இருவரும் அந்த இடத்திலேயே உயிர் இழந்தனர்.
அந்த சிறுவனின் சட்டையில் ரத்தக்கறைகள் பட்டு இருந்தன. உடனே அந்த சட்டையை மாற்றி வேறு சட்டை அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.
இந்த நிலையில் தாய், மகள் கொல்லப்பட்ட விஷயம் வெளியே தெரிய வந்தது. போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தினார்கள். சிறுவன் மாயமாகி இருந்ததால் அவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவன் வாரணாசியில் சுற்றித் திரிவது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அவனை கைது செய்தனர்.
தாய்- தங்கையை கொலை செய்ததை அவன் ஒத்துக்கொண்டான். அவனை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.