தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு: நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்

உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு: நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்
Published on

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேரோட்டத்தின்போது தேர் திரும்புகையில் சக்கரத்திற்கும் சுவற்றுக்கும் இடையில் ஹர்ஷவர்தன் (19) என்கிற இளைஞர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், பலத்த காயமடைந்த கல்லூரி மாணவன் சஷ்டிகன் (19), தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இன்று (31.05.2026) காலை 10.30 மணியளவி அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் தேர்த்திருவிழாவின்போது தேரின் சக்கரத்திற்கும் அருகிலிருந்த சுவற்றிற்கும் இடையே எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்ட ஹர்ஷவர்தன் (வயது 18). த/பெ.கோவிந்தராஜா, என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் உயிரிழந்து விட்டார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஷ்டிகன் (வயது 19) த/பெ.கொரிசங்கர் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அணிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com