

சேலம் டவுன் போலீசார் நேற்று கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே சந்கேதத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் அம்மாப்பேட்டை நஞ்சம்பட்டி ரவுண்டானா பகுதியை சேர்ந்த வைத்தீஸ்வரன் (19) பள்ளி மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து வைத்தீஸ்வரனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலான 140 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பள்ளி அருகில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.