

மதுபான பாரில் ஏற்பட்ட மோதல் காரணமாக யான்சி என்கிற இலங்கையை சேர்ந்த இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மதுபான பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
முன்னதாக, கோயம்பேட்டில் உள்ள தனியார் பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரையும் பவுன்சர்கள் வெளியேற்றியுள்ளனர்.
இலங்கை பெண்ணான யான்சி உள்ளிட்ட மூன்று பேர் மற்றும் சுமன் சக்திவேல் குழுவினர் பாருக்கு வெளியிலும் தாக்கிக் கொண்டனர்.
பின்னர், யான்சி தனது தோழிகளுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டபோது பின்தொடர்ந்த கும்பல் வேகமாக காரை மோதி வெறிச்செயலில் ஈடுபட்டது.
கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட யான்சி சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் உடன் வந்த சிறுமிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காரை ஏற்றி பெண்ணை கொலை செய்தவர்கள் மாட்டிக்கொள்வோம் என கோயம்பேடு பூண்டு மார்க்கெட்டில் காரை நிறுத்திவிட்டு தப்பியோடி உள்ளனர்.
காரில் இருந்த திமுக கொடி, நம்பர் பிளேட்டை கழட்டிவிட்டு பின்னர் காரை மார்க்கெட்டில் விட்டுவிட்டு 7 பேரும் தப்பியதாக கூறப்படுகிறது.
முக்கிய குற்றவாளியான சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் என 7 பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது.
ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய ஒருவரையும் கோயம்பேடு காவல்துறை கைது செய்தது.
புதுச்சேரியில் மூவரையும் எஞ்சியவர்களை சென்னையின் பல்வேறு பகுதிகளில் வைத்து காவல்துறை கைது செய்துள்ளது.
பாலகுரு, கிஷோர், சுமன், விமல், மோகன சுந்தரம், ராகுல், ஜோஷ்வா ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் மதுபான பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.