

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று சென்னை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சமீபத்திய எம்.எல்.ஏக்கள். ராஜினாமா குறித்துப் பேசிய அவர்கள்,
“மதுபோதையைவிட மோசமாக அரசியல் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பரவிவருகிறது.
தேர்தல் நேரங்களில் கூட்டணிகள் மாறுவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த தேர்தலுக்கு பிறகு, ஒரு அணியில் வெற்றி பெற்றவர்கள், மற்றொரு அணிக்கு மாறுவது, அவர்களை இழுப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இதுவரை ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது ஆறோடு நிற்குமா? அல்லது 16 ஆகுமா, 60 ஆகுமா, 100 ஆகுமா என்று சொல்ல முடியாத அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. தினமும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இந்தக் கட்சியிலிருந்து அந்தக் கட்சிக்கு மாறுகிறார், இன்னும் 6 பேர், 10 பேர் தயாராக இருக்கிறார்கள் என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
எந்த அளவிற்கு ஒரு நாகரீகமான அரசியலுக்குச் சொந்தக்கார மாநிலமாகத் தமிழ்நாடு இருந்ததோ, அந்தத் தமிழ்நாடு இன்று அண்டை மாநிலங்களாலும், இந்திய அளவிலும், உலக அளவிலும் ஒரு கேலிக்கூத்தாகப் பார்க்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரத்தின் மூலமாக இழுக்கக்கூடிய செயல்கள் நடைபெறுவதாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு கட்சியில் வெற்றிப்பெற்று, இரண்டு மாதங்களுக்குள் இடத்தை மாற்றுவது, எண்ணங்களை மாற்றுவது என்பது உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்யக்கூடிய துரோகம்.
அந்த தவறுகளை சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யக்கூடாது. நமக்கு தேவை என்பதால் மாற்றுக்கட்சியினரை தங்கள் கட்சிக்கு இழுக்கக்கூடாது. அரசியலில் கரணம் தப்பினால் மரணம். அரசியல் லாபங்களுக்காக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவதும், அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்துவதும் தவறான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
கட்சித்தாவல் தடைச்சட்டத்தைக்கூட மறுபரிசீலனை செய்யவேண்டும். தவெக அமைச்சர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள் என்றால் அது தவறான உதாரணம். அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல்வாதிகளும் கொள்கை, கோட்பாடுகளுடன் இல்லை. ஆதாயத்திற்காக மட்டும்தான் கட்சியில் இருக்கின்றனர்.
பதவி இல்லை என்றால் அரசியல்வாதிகளுக்கு உயிர் போய்விடுமா? தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் அரசியல்வாதிகள் தவறான முன்னுதாரணங்களை தருகின்றனர்.
வெங்கட நாராயணா நியமனம் என்பது மிகவும் தவறான செயல். அவருக்கும், தமிழ்நாடு அரசியலுக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது. தனக்கு வேண்டியவர் என்பதால் ஒரு பதவியில் ஒருவரை நியமிக்கக்கூடாது. அவருக்கும், அரசியலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இதுபோன்ற நியமனங்களை விஜய் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.” என தெரிவித்தார்.