சென்னையில் குடிநீரை அளவிடும் ‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்தும் பணி தொடங்கியது

தற்போதுள்ள பழுதடைந்த குடிநீர் மீட்டர்கள் மற்றும் புதிய டிஜிட்டல் மீட்டர் அமைப்பின் நீண்ட கால நம்பகத்தன்மை குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
Published on

சென்னை முழுவதும் அதிகமாக குடிநீர் பயன்படுத்தக்கூடிய கட்டிடங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி தொடங்கி உள்ளது.

ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களை பொருத்தி இயக்குவதற்காக ஜே.டபிள்யூ.ஐ.எல். இன்ப்ரோ லிமிடெட் என்ற ஒப்பந்த நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தும் அளவு மற்றும் கட்டண வசூலிக்கும் முறைகளை ஆய்வு செய்ய தொடங்கி உள்ளது. குடிநீரை பயன்படுத்தும் நேரத்தில் கண்காணிக்கவும் நீர் பயன்பாட்டை சீரமைக்கவும் சென்னை குடிநீர் வாரியம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. நகரின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள ஒரு லட்சம் அதிக நீர் பயன்படுத்தக்கூடிய கட்டிடங்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. திட்டத்தின் மதிப்பு ரூ.273.60 கோடியாகும். இந்த நிறுவனம் பொதுமக்களின் தரவுகளை ஆய்வு செய்யும் பணிகளை தொடங்கி உள்ளது. கட்டுமான பணியை தொடங்குவதற்கு முன்னதாக பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்து திட்டத்தை இது செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக 47,043 தனிப்பட்ட கட்டிடங்கள் மற்றும் 26 ஆயிரத்து 886 வணிக கட்டமைப்புகள் உட்பட மொத்தம் 73 ஆயிரத்து 608 கட்டிடங்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த அடையாளம் காணப்பட்டுள்ளன. சுமார் 2500 சதுர அடி பரப்பளவு உள்ள கட்டிடங்களும் இதில் அடங்கும். ஐ.ஓ.டி. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த மீட்டர்கள் குடிநீர் நுகர்வை கண்காணிக்கும். ஒவ்வொரு மாதமும் தானியங்கி முறையில் மீட்டர் ரீடிங் எடுக்கப்பட்டு கட்டண விவரங்கள் உருவாக்கப்படும்.

இந்த மீட்டர் நெட்ஒர்க் கட்டுமான பணிகள் ஆகஸ்ட் 2028க்குள் முடிக்கப்பட வேண்டும். அதன் பிறகு இந்த நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு இந்த அமைப்பை இயக்கி பராமரிக்கும்.

தற்போதுள்ள பழுதடைந்த குடிநீர் மீட்டர்கள் மற்றும் புதிய டிஜிட்டல் மீட்டர் அமைப்பின் நீண்ட கால நம்பகத்தன்மை குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். முறையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய துல்லியமான கட்டண வசூலுக்கு தரமான மீட்டர்களை பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com