நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ய முயன்ற கணவர்- 5 குழந்தைகளுடன் கலெக்டர் ஆபீசில் பெண் தர்ணா

எனது கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.
பெண் தர்ணா
Published on

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு 5 குழந்தைகளுடன் வந்த இளம்பெண் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த காவலர்கள் அவரை அழைத்து விசாரித்தனர். அவர் தெரிவிக்கையில், எனது பெயர் சிவசத்யா (வயது 27). எனக்கும் அய்யலூர் பூசாரிபட்டியைச் சேர்ந்த வண்டித்துரை என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

எங்களுக்கு பஞ்சவர்ணம் (10), புனிதவள்ளி (9), சங்கரி (7), ஆதினி (2), ஆண்டியப்பன் (2) ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர். மகள்கள் முறையே 5, 4, 2ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடைசியில் பிறந்த 2 குழந்தைகள் இரட்டை குழந்தைகள் ஆவர்.

நடத்தையில் சந்தேகம்

நாங்கள் அனைவரும் மாமியார் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.

குடிக்காத பொழுது குழந்தைகளுடன் சந்தோசமாக இருக்கும் அவர் குடித்து விட்டு வந்தால் எனது நடத்தையின் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்வார்.

கொலை மிரட்டல்

மேலும் பெண் குழந்தைகள் தனக்கு பிறக்கவில்லை என கூறி அவர்களையும், என்னையும் கொலை செய்யப்போவதாக மிரட்டி வந்தார். இதனால் இரவு தூங்கும் போது கூட எனக்கு பயமாக இருக்கும். இந்த சூழலில் என்னையும் எனது குழந்தைகளையும் வீட்டை விட்டு எனது கணவர் விரட்டி விட்டார். மீண்டும் வந்தால் கண்டிப்பாக கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். உயிருக்கு பயந்து உறவினர் வீடுகளில் தங்கி இருந்தேன். தற்போது என் கணவரிடம் இருந்து எனக்கும் என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். எங்கள் வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என தெரிவித்தார்.

இதனையடுத்து தங்கள் கோரிக்கை தொடர்பான மனுவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்து செல்லுமாறு காவலர்கள் அறிவுரை கூறி அவரை அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com