பெண்ணின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கள்ளக்காதலன்- 2 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த இடத்தில் மாவட்ட எஸ்.பி.  ஆய்வு
Published on

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தட்டான்குளம் பள்ளிவாசல் எதிரே இன்று காலை முட்புதரில் ஒரு அடையாளம் தெரியாத பெண் இறந்து கிடப்பதாக பழனி டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

படுகொலை

இதனையடுத்து பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முட்புதரில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஆடைகள் கிழிந்த நிலையில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். அப்பகுதியில் இருந்தவர்களை அழைத்து போலீசார் இறந்த பெண் யார்? என விசாரித்தனர். ஆனால் அவர்கள் இறந்தவர் யார்? என தெரியவில்லை என கூறினர்.

விசாரணை

இதனையடுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்டவர் யார்?, எந்த ஊர்? என்றும் விசாரணை நடத்தினர்.

பாலியல் தகராறில் பெண்ணை வரவழைத்து அதன் பின்னர் கொலை செய்தார்களா? அல்லது குடிபோதையில் இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கொலை செய்யப்பட்ட இடத்தில் மாவட்ட எஸ்.பி. பிரதீப் தலைமையில் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

கள்ளக்காதலன் கைது

போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் காளீஸ்வரி (34) என தெரிய வந்தது. இவருக்கும் கருப்பசாமி என்பவருக்கும் திருமணம் ஆகி அவரை விட்டு பிரிந்து காளீஸ்வரி வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த மகுடீஸ்வரன் (40) என்பவருடன் காளீஸ்வரி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் புளியம்பட்டியைச் சேர்ந்த குரு என்பவர் லாட்ஜூக்கு ஆட்களை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குருவுடன் காளீஸ்வரி அடிக்கடி சந்தித்து பேசியதால் மகுடீஸ்வரன் கண்டித்துள்ளார். ஆனால் இருந்த போதும் காளீஸ்வரி தொடர்ந்து அவருடன் பேசி வந்துள்ளதாக தெரிகிறது.

2 மணி நேரத்தில் கைது

இதனால் ஆத்திரமடைந்த மகுடீஸ்வரன் நேற்று இரவு காளீஸ்வரியை அழைத்து வந்து இனிமேல் குருவுடன் பேசக்கூடாது என கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரது ஆடைகளை கிழித்து அருகில் இருந்த கல்லை எடுத்து காளீஸ்வரியின் தலையில் போட்டு கொன்று விட்டு தப்பி ஓடி விட்டார்.

பின்னர் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் மகுடீஸ்வரன் சென்றது தெரிய வரவே அவரை போலீசார் கைது செய்தனர். 2 மணி நேரத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com