மாம்பழம் விற்பனையின் போது போலி 500 ரூபாய் கொடுத்து மூதாட்டியை ஏமாற்றிய பெண்

போலி ரூபாய் நோட்டை கொடுத்து மூதாட்டியை ஏமாற்றி மாம்பழம் வாங்கி சென்ற பெண் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மாம்பழம் விற்பனையின் போது போலி 500 ரூபாய் கொடுத்து மூதாட்டியை ஏமாற்றிய பெண்
Published on

திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி என்ற மூதாட்டி கடந்த 35 ஆண்டுகளாக சாலை ஓரத்தில் கடை அமைத்து சீசனுக்கு ஏற்றார் போல் பழ வியாபாரம் செய்து வருகிறார். தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் வழக்கம் போல் மாம்பழங்களை மொத்தமாக வாங்கி ஜெயலட்சுமி விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில் மாம்பழம் வாங்க வந்த பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் டம்மி 500 ரூபாய் கொடுத்து ரூ.150 -க்கு மாம்பழம் வாங்கிவிட்டு மீதி பணத்தை வாங்கிச் சென்றார். சிறிது நேரம் கழித்து பையில் வைத்திருந்த அந்த 500 ரூபாய் நோட்டை மூதாட்டி ஜெயலட்சுமி எடுத்து பார்த்தபோது சந்தேகம் ஏற்பட்டது. அந்த ரூபாய்நோட்டை அருகில் இருந்தவர்களிடம் காட்டி கேட்டபோது அது போலியான டம்மி 500 ரூபாய் என்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி மிகுந்த மன வருத்தத்தில் கண்ணீர் விட்டார்.

ஏற்கனவே நோயால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வியாபாரம் செய்ய உதவியாக இருந்த கணவரும் இறந்துவிட்டதால் ஜெயலட்சுமி வாழ்க்கையுடன் போராடி தன்னந்தனியாக பழ வியாபாரம் செய்து வருகிறார். மருத்துவ செலவுக்கே வியாபாரத்தில் கிடைக்கும் பணம் முழுவதும் செலவாகி விடும் நிலையில் போலியான 500 ரூபாய் கொடுத்து பெண் ஒருவர் ஏமாற்றியதை நினைத்து அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் அந்த போலி 500 ரூபாய் நோட்டை அங்கு வந்தவர்களிடம் காண்பித்து கண் கலங்கியது பார்ப்பவர்களை பரிதாபப்பட வைத்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

போலி ரூபாய் நோட்டை கொடுத்து மூதாட்டியை ஏமாற்றி மாம்பழம் வாங்கி சென்ற பெண் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக குறிப்பிட்ட நேரத்தில் மூதாட்டியிடம் மாம்பழம் வாங்கி சென்ற பெண் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com