கோத்தகிரி அருகே மரத்தில் ஏறி பலாப்பழம் பறித்த காட்டு யானை

பலா மரங்களில் பழுத்த பலாப்பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதிகளிலிருந்து காட்டு யானைகள் வருவது வழக்கம்.
கோத்தகிரி அருகே மரத்தில் ஏறி பலாப்பழம் பறித்த காட்டு யானை
Published on

கோத்தகிரி அருகே குஞ்சப்பனை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக வளர்க்கப்பட்டுள்ள பலா மரங்களில் பழுத்த பலாப்பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதிகளிலிருந்து காட்டு யானைகள் வருவது வழக்கம்.

பலாப்பழம்

தற்போது பலாப்பழ ங்கள் சீசன் தொடங்கி உள்ள நிலையில் அதனை சாப்பிடுவதற்காக ஏராளமான காட்டு யானைகள் அப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன.

இந்த காட்டு யானைகள் அவ்வப்போது அங்கு வந்து பலாப்பழத்தை பறித்து சாப்பிட்டு விட்டு செல்கின்றன.

இந்நிலையில் அந்த பகுதியில் சாலையோரத்தில் இருந்த பலா மரத்தில் யானை ஒன்று பலாப்பழங்களை பறிக்க முயன்றுள்ளது.

எனினும் பலாப்பழங்கள் உயரமான இடத்தில் இருந்ததால் அந்த யானை சாதுரியமாக செயல்பட்டு அதன் முன்னங்கால்களை அந்த மரத்தின் மீது வைத்து பலாப்பழங்களை பறிக்க முயற்சித்து, பழங்களை பறித்து சாப்பிட்டது. இந்த அரிய காட்சியை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான தொலைவில் இருந்து ரசித்ததுடன், தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.

சமூக வலைதளங்களில் வைரல்

பின்னர் இந்த வீடியோ காட்சியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சி இயற்கை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து காட்டு யானைகள் அருகில் சென்று யாரும் தொந்தரவு செய்யவோ, உணவளிக்கவோ, புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்காக வாகனங்களை நிறுத்தி கூட்டம் சேரவோ கூடாது என்றும், எப்போதும் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com