தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் இன்று மாலை வெளியாகிறது

தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த முறை 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் இன்று மாலை வெளியாகிறது
Published on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் திருவிழா கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புடன் தொடங்கியது. சுமார் ஒன்றரை மாதங்களாக நீடித்து வந்த இந்த ஜனநாயகத் திருவிழா இன்று மேற்கு வங்கத்தின் இறுதிக்கட்டத் தேர்தலுடன் நிறைவடைகிறது. இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்குப் பல மாநிலங்களில் மிக அதிக அளவிலான வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 9-ந்தேதி அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக நடந்தது. அதில் அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு 722 வேட்பாளர்கள் களம் கண்டனர். இங்கு 85.56 சதவீதம் பதிவாகியுள்ளன.

கேரளாவில் உள்ள 140 சட்டசபைத் தொகுதிகளுக்கு 883 பேர் போட்டியிட்டனர். அங்கு 78.27 சதவீத வாக்குகள் பதிவாகின. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு 294 பேர் போட்டியிட்டனர். அங்கு 91.23 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 23-ந்தேதி நடந்த 234 சட்டசபை தொகுதி தேர்தலில் 4,023 வேட்பாளர்கள் களம் கண்டனர். தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த முறை 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.

மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரை 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்குள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு 2,926 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். கடந்த 23-ந்தேதி முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து 93.19 சதவீத வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்ட தேர்தல் மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்று வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை 4-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிந்த எந்த மாநிலங்களிலும் இதுவரை வெளியிடப்படவில்லை. பொதுவாக ஒரு மாநிலத்தில் தேர்தல் வாக்கெடுப்பு 6 மணி அளவில் முடிந்த பின்னர் 6.30 மணிக்கே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்படும்.

ஆனால் இந்த தேர்தல்கள் 5 மாநிலங்களிலும் ஒரே சேர நடப்பதால் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை மேற்கு வங்க தேர்தல் 2-ம் கட்டமாக 29-ந்தேதி முடியும் மாலை 6 மணிக்கு மேல் தான் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி இன்று மாலை 6.30 மணியில் இருந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகும். பொதுவாக வாக்குப்பதிவு நடைபெறும் நாளில், வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்படும் ஆய்வே 'எக்ஸிட் போல்' எனப்படும். இது தேர்தலுக்கு முன் எடுக்கப்படும் கணிப்புகளைக் காட்டிலும் அதிகத் துல்லியம் வாய்ந்தது ஆகும்.

எனவே வாக்காளர்களின் மனநிலை, குறிப்பிட்ட தொகுதிகளில் நிலவிய மாற்றங்கள் மற்றும் வாக்கு சதவீத உயர்வு யாருக்குப் பாதகம் அல்லது சாதகம் என்பதைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே அனல் பறந்த தமிழக சட்டசபை தேர்தல் களம், இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் என்ன இருக்கும் என்பதை அறிய மக்களிடையே ஆர்வம் அதிகளவில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com