புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவது எப்போது?- பணிகள் இன்னும் முடியாததால் தாமதம்

பழைய பஸ்நிலையத்திலேயே நெரிசலான இடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவது எப்போது?- பணிகள் இன்னும் முடியாததால் தாமதம்
Published on

திருவள்ளூர், திரு.வி.க. பஸ் நிலையம், ராஜாஜி சாலையில் நெரிசலான இடத்தில் இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் பஸ்களை இயக்கவும், பயணிகள் வந்து செல்லவும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள வேடங்கிநல்லூரில் ரூ.36 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. அங்கு ஒரே நேரத்தில் 50 பஸ்கள் வரை நிறுத்தும் அளவுக்கு பல்வேறு கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் பஸ் நிலைய பணிகள் 90 சதவீதம் மட்டுமே நிறைவடைந்த நிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி பணி முடிவதற்கு முன்பே பஸ்நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை. மீதமுள்ள பணிகளை முடித்து கடந்த மாதம் 30-ந்தேதி முதல் அனைத்து பஸ்களும், வேடங்கிநல்லூரில் இருந்து இயக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் கட்டுமான பணி, சாலை அமைத்தல் மற்றும் சுற்றுசுவர், மின் இணைப்பு உள்ளிட்ட பணிகள் இன்னும் நிறைவடையாமல் நடந்து வருகிறது.

இதன் காரணமாக புதிய பஸ்நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. பழைய பஸ்நிலையத்திலேயே நெரிசலான இடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே திருவள்ளூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய பஸ் நிலையத்தில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com