மேகதாதுவில் ஒரு செங்கலைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் விஸ்வநாதன்

எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு கொள்கை முடிவுகளை முதலமைச்சர் விஜய் எடுப்பார்.
மேகதாதுவில் ஒரு செங்கலைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் விஸ்வநாதன்
Published on

நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு இன்று மதுரை தமுக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் ஜவகர்லால் நேருவால் கட்டமைக்கப்பட்டது. இந்தியா உயர்ந்து நிற்க முழு காரணம் காங்கிரஸ்தான். நாட்டை வலுவாக காங்கிரஸ் கட்டமைத்துள்ளது. ராகுல் காந்தி ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்.

உயர்கல்வி கல்லூரி சேர்க்கை கவுன்சிலிங் தொடர்பாக ஜூன் 3-ந் தேதிக்குள் உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.

மருத்துவம், பொறியியல் தேர்வில் தமிழ் மொழி இடம்பெறாததற்கு தொழில்நுட்ப காரணம் உள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்து பேச இருக்கிறேன்.

இதுகுறித்து முதலமைச்சர் விஜய் வழி காட்டுதலின்படி செயல்பட இருக்கிறோம். முதலமைச்சரின் முடிவுக்கு காத்திருக்கிறோம்.

எங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு கொள்கை முடிவுகளை முதலமைச்சர் விஜய் எடுப்பார்.

கடந்த அரசின் நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு கிடையாது.

ஒரு கட்சியில் இருந்து அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விருப்பத்திற்கு ஏற்றவாறு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விரும்பும் கட்சியில் இணைந்து மீண்டும் மக்களை சந்திக்கப்போகிறார்.

அவர் எம்.எல்.சியாக வரப்போவதில்லை. ராஜ்ய சபாவிலோ வரப்போவதில்லை. மீண்டும் மக்களிடம் செல்ல போகிறார். மீண்டும் மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு வர விரும்புகிறார். இது ஜனநாயகத்தின் விரோதமாகவோ இல்லை. என்னை பொறுத்தமட்டிலும் இதனை குதிரை பேரமாக கருதவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணியின் கருத்து முரண்பட்ட கருத்தாகவே நான் பார்க்கிறேன். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்பது மாணிக்கம் தாகூருடையது தான். மாணிக்க தாகூரின் கருத்து என்னுடைய கருத்து.

சண்டையோ, மோதல்களோ இருக்கக் கூடாது என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் விருப்பம். ஜனநாயகத்தில் மரபுகளே கடை பிடிக்க வேண்டும். வி.சி.க. தலைவர் திருமாவளவன் மோதல்போக்கு கடைபிடிக்க கூடாது என்று சொல்லியிருக்கிறார்.

மோதல் என்பது அவசியமற்றது, அநாவாசியமானது. மக்களுக்கு பணியாற்ற வந்திருக்கிறோம். மக்கள் கருத்தைதான் பிரதிபலிக்க வேண்டுமே தவிர மாறாக வன்முறை போக்கு இதற்கெல்லாம் இடமளிக்கக் கூடாது.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஒரு செங்கலைவைக்க கூட அனுமதிக்க மாட்டோம். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அதுதான். தமிழக முதலமைச்சர் விஜய்யின் நிலைப்பாடு என்னவோ அந்த நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சி உறுதியாக நிற்கும்.

5 ஆண்டுகள் இந்த ஆட்சி நிலைத்து நிற்கும். முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்துவதற்கு இந்த ஆட்சியை 5 ஆண்டுகள் கொண்டு செல்வதற்கு காங்கிரஸ் பேரியக்கம் உறுதுணையாக அவருக்கு இரும்பு கோட்டையாக பின்னால் நிற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com