

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பகலில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பிற்பகல் நேரங்களில் வானில் கருமேகக் கூட்டங்கள் திரண்டு பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை மாவட்டம் முழுவதும் இடி- மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. கோடை வெயில் சுட்டெரித்ததால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்று மக்கள் அச்சம் அடைந்திருந்தனர். ஆனால் தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
மாவட்ட மற்றும் மாநகர பகுதி முழுவதும் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் பரவலாக மழை பெய்திருந்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அங்கு அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பெய்தது.
களக்காடு, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மாநகர பகுதியை பொருத்தவரை நெல்லை மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் 14 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஏராளமான இடங்களில் பரவலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி கிடந்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையை பொறுத்தவரை நேற்று வரை அணைக்கு 100 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் தொடர் மழையால் இன்று வினாடிக்கு 211 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த மழை தொடரும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயரும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அந்த அணையில் 34 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணையில் 14 மில்லி மீட்டரும் சேர்வலாறு அணையில் 7 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய குற்றாலம் அருவிப்பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் மெயின்அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க குவிந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய அணைகளான குண்டாறு மற்றும் கருப்பாநதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக அங்கு 79 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 88 கன அடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 24 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 33 அடியை எட்டியுள்ளது. இதேபோல் மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான குண்டாறு அணை பகுதியில் 62 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 17 1/2 அடியாக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான அடவிநயினார் அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 7 1/2 அடி உயர்ந்து 28 1/2 அடியாக உள்ளது. ராமநதி மற்றும் கனடா அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் அந்த அணையின் நீர்மட்டமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி மற்றும் ஆய்க்குடி சுற்று வட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக ஆய்க்குடியில் 9 சென்டிமீட்டர், செங்கோட்டையில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று பிற்பகலில் தொடங்கி நள்ளிரவு வரையிலும் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த கனமழையின் காரணமாக குளிர்ச்சி நிலவி வருவதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம் சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக குலசேகரபட்டினம் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் தலா 7 சென்டிமீட்டர் மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் சாரல் மழை தொடர்ச்சியாக பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்தது.