வியாசர்பாடியில் சிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யும்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆக்கிரமித்து கட்டப்பட்ட 10-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அகற்றி கோவில் நிலத்தை மீட்டனர்.
வியாசர்பாடியில் சிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு
Published on

பெரம்பூர்:

வியாசர்பாடியில் ரவீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் குளம் வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவில் உள்ளது.

இந்த குளத்தின் பகுதியை சிலர் ஆக்கிரமித்து சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி வசித்து வந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யும்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்யாமல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி கோவில் இடத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை உடனடியாக காலி செய்ய உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் என். பாஸ்கரன், தாசில்தார் காளியப்பன், அதிகாரிகள் சிவப்பிரகாசம், தனசேகரன் இன்று காலை கோவில் குளத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்தனர்.

அவர்களிடம் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட 10-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அகற்றி கோவில் நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.10 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com