கொலையை செய்து விட்டு... தூத்துக்குடி +2 மாணவி கொலை வழக்கில் கைதான ரவுடி ‘பகீர்’ வாக்குமூலம்

பாதுகாப்பு கருதி தர்மமுனீஸ்வரன் இரவோடு, இரவாக மதுரை ஜெயிலுக்கு மாற்றப்பட்டான்.
கொலையை செய்து விட்டு... தூத்துக்குடி +2 மாணவி கொலை வழக்கில் கைதான ரவுடி ‘பகீர்’ வாக்குமூலம்
Published on

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கொலை வழக்கில் சாயல்குடியை சேர்ந்த தர்மமுனீஸ்வரன் (வயது 37) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

தர்மமுனீஸ்வரன் மீது பல்வேறு திருட்டு, நகைபறிப்பு உள்ளிட்ட 32 வழக்குகள் உள்ளனர். இவர் கடந்த 2020-ம் ஆண்டு எட்டயபுரம் பகுதியில் மூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதாகி 30 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ஜாமினில் வெளிவந்த நிலையில் அவர் மாணவியை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைதான தர்ம முனிஸ்வரனிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர் கூறியதாவது:-

நான் சம்பவத்தன்று காட்டுப்பகுதியில் நின்று கொண்டிருந்தபோது மாணவி அந்த வழியாக சென்றதை பார்த்தேன். இதனால் சபலம் அடைந்த நான், பின்தொடர்ந்து சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தேன்.

இதனால் அவர் கத்தி கூச்சலிடவே அந்த வழியாக செல்பவர்கள் சத்தம் கேட்டு வந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் மாணவியின் கழுத்தில் எனது காலை வைத்து அமுக்கினேன். தொடர்ந்து அவரது துப்பட்டாவால் மாணவி கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

தொடர்ந்து அதன் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் சென்று மறைந்து கொண்டேன். மறுநாள் அதிகாலையில் மீண்டும் மோட்டார் சைக்கிளில் தப்பித்து தூத்துக்குடிக்கு சென்று விட்டேன்.

இவ்வாறு அவன் கூறினான்.

தர்மமுனீஸ்வரன் கூறிய தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்த போலீசார் நேற்று மாலையில் அவனை தூத்துக்குடி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி 14 நாட்கள் சிறை காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவனை அடைத்தனர்.

இந்நிலையில், பாதுகாப்பு கருதி தர்மமுனீஸ்வரன் இரவோடு, இரவாக மதுரை ஜெயிலுக்கு மாற்றப்பட்டான்.

இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சரக டி.ஐ.ஜி. கூறியதாவது:-

கைதான முனீஸ்வரன் கடந்த 7,8,9-ந்தேதிகளில் சம்பவம் நடந்த காட்டுப்பகுதியில் நடமாடிக்கொண்டு இருந்துள்ளான். அந்த வழியாக வயல் வேலைக்கு செல்லும் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்த திட்டமிட்டுள்ளான். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்த 3 நாட்களிலும் ராமநாதபுரம் பதிவெண் கொண்ட அவனது திருட்டு மோட்டார் சைக்கிளில் மணிக்கணக்கில் அங்கு நின்றதால் உள்ளூரை சேர்ந்த சோலையப்பன் என்ற நபர் அந்த மோட்டார் சைக்கிளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் மாணவி கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீசார் விசாரணை தாமதமான நிலையில், சோலையப்பன் தானாக முன்வந்து எங்களிடம் இந்த தகவலை தெரிவித்து மோட்டார் சைக்கிள் புகைப்படத்தை காண்பித்தார். அதுவே இந்த வழக்கின் முக்கிய துருப்புச்சீட்டாக அமைந்தது.

கொலையை நிகழ்த்திவிட்டு தப்பிச்சென்ற முனீஸ்வரன், 2 நாட்களாக எதுவும் தெரியாதது போல் உள்ளூரில் இருக்கும் தனது கூட்டாளிகளிடம் உங்கள் ஊரில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதாமே என்று கதை கேட்டுள்ளான். மேலும் மறுநாள் காலை குறித்த நேரத்தில் பழைய வழக்கில் குளத்தூர் போலீஸ் நிலையத்தில் சென்று கையெழுத்திட்டு வந்துள்ளான்.

இந்த சம்பவத்தில் அவன் ஒருவன் மட்டுமே ஈடுபட்டுள்ளான். வேறு யாருக்கும் தொடர்பு இல்லை. அவனை உடனடியாக கைது செய்து விட்டோம். நிறைய சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டி இருப்பதால், காவலில் எடுத்து விசாரிக்க விரைவில் மனு தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com