

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் வரும் மே 25-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது.
கடந்த மார்ச் 10ம் தேதியன்று, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய 17 வயது மாணவி, அன்று மாலை இயற்கை உபாதைக்காக வெளியில் சென்றபோது காணாமல் போனார். மறுநாள் குமாரபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த கொலைவழக்கு தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த குற்றவாளியை கண்டறிய, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சுமார் 98 சிசிடிவி கேமரா காட்சிகள், செல்போன் சிக்னல்கள் மற்றும் டி.என்.ஏ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு ரவுடி தர்ம முனீஸ்வரன் இந்த கொலையை செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே கோவில்பட்டியில் ஒரு வயதான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் ஆவார்.
அந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் பெற்று, தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்த நிலையில்தான் பிளஸ்-2 மாணவியையும் கொடூரமாகக் கொலை செய்தார்.
இந்நிலையல் மாணவி வழக்கில் அனைத்துத் தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றம் வரும் திங்கள்கிழமையன்று இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.