

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் +2 மாணவி கொலைவழக்கு குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு, இரட்டை தூக்குதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தர்ம முனீஸ்வரனை குற்றவாளி என அறிவித்தநிலையில், தற்போது தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 10ம் தேதியன்று விளாத்திக்குளம் குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், மார்ச் 11 அன்று காட்டுப்பகுதியில் கொடூர காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகள், டிஎன்ஏ பரிசோதனை ஆகிய ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வழக்கில் தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் அனைத்துக்கட்ட விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்புக்கு வந்தது.
காலை, தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தற்போது இரட்டை தூக்குத்தண்டனை என தண்டனை விவரத்தை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே கடந்த 2020-ல் ஒரு மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, ஜாமினில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.