

சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விஜய் முதலமைச்சர் ஆன பிறகு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள்.
கடந்த வாரம் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தனர்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், பாப்பிரெட்டிபட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, சங்ககிரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரராஜ், வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மான்ராஜ், சாத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்ளிட்ட பலர் த.வெ.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இந்த நிலையில் இன்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் ஏராளமானோர் விலகி த.வெ.க.வில் இணைந்தனர். இதற்கான விழா சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் த.வெ.க. பொதுச்செயலாளர் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் த.வெ.க.வில் இணைந்தனர்.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், வட சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான பால கங்கா அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இன்று இணைந்தார். இதேபோல் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான கே.டி.பச்சைமால், திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. வனரோஜா, அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆகியோரும் இன்று த.வெ.க.வில் இணைந்தனர்.
இதேபோல் பா.ஜ.க.வை சேர்ந்த விஜயதாரணி அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தார். இவர் விளவங்கோடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் ஏற்கனவே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது பா.ஜ.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்து உள்ளார்.
மேலும் குமரி மாவட்ட முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர்கள் கிருஷ்ணகுமார், சந்தோஷ் ஆகியோரும் த.வெ.க.வில் இனைந்தனர். சென்னை வளாசரவாக்கம் நகராட்சி முன்னாள் தலைவர் இ.சி.சேகர் ஏற்பாட்டில் சுமார் 300 பேர் இன்று த.வெ.க.வில் இணைந்தனர்.