இன்று காதலர் தினம்- ஊட்டி, கோவை சுற்றுலா தலங்களில் குவிந்த காதல் ஜோடிகள்

காதலர்கள் ஒருவருக்கொருவர் காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.கோவை மாவட்டத்தில் வ.உ.சி. பூங்கா மற்றும் வாலாங்குளம் கரையில் காலை முதலே காதல் ஜோடிகள் குவிந்தனர்.
இன்று காதலர் தினம்- ஊட்டி, கோவை சுற்றுலா தலங்களில் குவிந்த காதல் ஜோடிகள்
Published on

கோவை:

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஊட்டியில் ஏராளமான சுற்றுலா தலங்கள் மற்றும் இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் இருப்பதால் காதல் ஜோடிகள் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக நீலகிரிக்கு வருவது வழக்கம்.

இந்த ஆண்டும் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக ஏராளமான காதல் ஜோடிகள் ஊட்டிக்கு வந்துள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான காதல் ஜோடிகள் வந்துள்ளனர்.

இன்று காலை காதலர்கள் ஒருவருக்கொருவர் காதலர் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

இருவரும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்துகொண்டு, ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவுக்கு சென்றனர். அங்கு ரோஜா பூக்களை கொடுத்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து தங்கள் காதலின் அன்பை வெளிப்படுத்தி கொண்டனர்.

தொடர்ந்து பூங்காவில் அடுக்கி வைத்திருந்த மலர் செடிகளை பார்வையிட்டு, அதன்முன்பு ஜோடியாக நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

பின்னர் அங்குள்ள புல்வெளியில் அமர்ந்து ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி காதல் பரிசாக ரோஜாப்பூ, பரிசு பொருட்களையும் வழங்கினர்.

தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா போன்ற சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர்.

கோவை மாவட்டத்தில் வ.உ.சி. பூங்கா மற்றும் வாலாங்குளம் கரையில் காலை முதலே காதல் ஜோடிகள் குவிந்தனர்.

அவர்கள் தங்களுக்குள் வாழ்த்துக்களை கூறி கொண்டு பல்வேறு பரிசுபொருட்களையும் பகிர்ந்து கொண்டனர். சில காதல் ஜோடிகள் குளக்கரையில் அமர்ந்து காதல் பரிசாக அன்பு முத்தங்களை பகிர்ந்து கொண்டதையும் பார்க்க முடிந்தது.

இதேபோல் உக்கடம் பெரிய குளம், ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, கோவை குற்றாலம் பகுதிகளிலும் காதல் ஜோடிகள் நீண்ட நேரம் அமர்ந்து மனம் விட்டு பேசி மகிழ்ந்தனர்.

காதலர் தினத்தையொட்டி மலர் விற்பனை நிலையங்கள், கிப்ட் ஷாப்புகளிலும் பரிசு பொருட்கள் வாங்க ஏராளமான காதல் ஜோடிகள் திரண்டு இருந்ததை காண முடிந்தது.

காதல் ஜோடியினர் பொது இடங்களில் அத்துமீறாமல் இருக்கவும், அதே சமயம் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் காதல் ஜோடிகளை தொந்தரவு செய்யாமல் இருக்கவும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஊட்டி மற்றும் கோவையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com