

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளைய்ததில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றினார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர்.
இதனிடையே, கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாடாளுமன்றத் தொகுதிகளின்
மறு வரையறை குறித்து
இந்திய
இறையாண்மையைப் போலவே
அறிவுலகமும் அச்சப்படுகிறது
இந்தியா
தெற்கு என்ற திசையைக்
கழித்துவிட்டு
மூன்று திசைகளோடு இயங்க
முடிவுகட்டியிருப்பதாய்த்
தோற்றம் தருகிறது
இந்த மறுவரையறை
மக்கள் தொகையை
முன்னிறுத்துகிறதா
மாநில நலன்களை
முன்னிறுத்துகிறதா
என்ற கேள்விகளோடு
விவாதிக்கப்பட வேண்டும்
வட இந்தியாவைவிடத்
தென்னிந்தியாவின்
உறுப்பினர் எண்ணிக்கை குறைவது
இந்தியா தன் உறுப்பையே
குறைத்துக்கொள்வது போன்றதாகும்
விந்திய மலைக்குத்
தெற்கே உள்ளது விந்தியா என்றும்,
வடக்கே உள்ளதே இந்தியா என்றும்
ஒரு பூகோளப் புரட்சி நடப்பதற்கு
இந்தப் புது மசோதா வழிவகுக்கும்
பெண்களுக்கு இட ஒதுக்கீடு
தேவையெனில்
இருக்கும் தொகுதிகளைப்
பிரித்துக்கொடுக்கலாமே!
அல்லது அமைச்சரவையில்
மூன்றில் ஒரு பங்கு
இடமளிக்கலாமே!
நாடு
கடினமான பலகேள்விகளைக்
கடக்கவேண்டி இருக்கிறது
பெரியவர்களே
சிந்தியுங்கள்
தூபிகளில் உள்ள சிங்கங்கள்
தென்னிந்தியர்களைத்
தின்றுவிடக் கூடாது... என்று கூறியுள்ளார்.