

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.40 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறப்போர் இயக்கத்தைச் சேரந்த ஜெயராம் வெங்கடேசன் என்பவர் 2022-ல் அளித்த புகாரின் அடிப்படையில், எ.வ.வேலு, 9 நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் 'சங்கரானந்த் இன்ப்ரா' ஒப்பந்த நிறுவனம் உள்ளிட்டோர் மீது கூட்டுச் சதி, ஏமாற்றுதல், மோசடி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று வழக்குப் பதிவுசெய்தது.
இந்த வழக்கு விசாரணையின் ஒருபகுதியாக இன்று சென்னை, திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள எ.வ.வேலுவின் வீடுகள், அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.
இந்நிலையில் இச்சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.40 லட்சம் ரொக்கம், நெடுஞ்சாலைத்துறை தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.