

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மின் பகிர்மான மையத்தின் கீழ் வரும் ஊத்துக்காடு, நாயக்கன் குப்பம், அவலூர்,ஆசூர், புத்தாகரம், தேவரியம்பாக்கம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று இரவு திடீரென 2 மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இரவு சுமார் 9 மணியளவில் ஏற்பட்ட மின்தடையால் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுவதும் இருளில் மூழ்கின. இதுகுறித்து வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தை தொடர்புகொண்டு பொதுமக்கள் கேட்டபோது இன்னும் 10 நிமிடங்களில் மின்சாரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் வராததால் மக்கள் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடி வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, பின்னர் வாலாஜாபாத் – தாம்பரம் முக்கிய சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய அவர்கள் மின்வெட்டுக்கான சரியான காரணம் கூட தெரிவிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.
மேலும் போராட்டம் நடைபெற்ற நேரத்தில் மின்வாரியத்தின் எந்த அதிகாரிகளும் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், வாலாஜாபாத் காவல் நிலையத்திலிருந்தும் போலீசார் சம்பவ இடத்திற்கு வராததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் வாலாஜாபாத் – தாம்பரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் லாரிகள், தொழிற்சாலை வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இரவு நேரத்தில் தொழிற்சாலைகளுக்கு சென்று கொண்டிருந்த பலரும் சாலையிலேயே சிக்கி அவதிப்பட்டனர்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது,
பழைய சீவரம் பகுதியிலிருந்து வாலாஜாபாத் மின் பகிர்மான மையத்துக்கு வரும் முக்கிய மின் கேபிள் அறுந்து சேதமடைந்ததாகவும், அதை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் மின்தடைக்கு காரணமான விவரங்களை நேரடியாக அதிகாரிகள் வந்து தெரிவிக்காததை கண்டித்து சிலர் தொடர்ந்து சாலையில் அமர்ந்து கோஷமிட்டதால் அப்பகுதியில் இரவு நேரத்தில் பரபரப்பு நிலவியது.
இதேபோன்று காஞ்சிபுரம் நகரில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் சுமார் அரை மணி நேரம் மழை பெய்த நிலையில் காற்று காரணமாக மரங்கள் நகர் முழுவதிலும் ஆங்காங்கே முறிந்து விழுந்த நிலையில் காஞ்சிபுரம் நகரமே இருளில் மூழ்கியது. ஐந்து மணிக்கு கட்டான கரண்ட் சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு இரவு பதினோரு மணிக்கு வந்தது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.