

தமிழக வெற்றிக் கழகம் சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றது. மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள், ஐயுஎம்எல் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றார். விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று த.வெ.க. தெரிவித்தது.
அதன் அடிப்படையில் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வாதன் ஆகிய இரண்டு உறுப்பினர்கள் அமைச்சரவையில் பங்கேற்பார்கள் என்று காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கே.சி. வேணுகோபால் கூறியதாவது:-
காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் ராஜேஷ்கமார் மற்றும் விஷ்வநாதன் பங்கேற்க ஒப்புதல் வழங்கியுள்ளார். 59 வருடத்திற்குப் பிறகு தமிழ்நாட்டு அமைச்சரவையில் பங்கேற்பது, இது எங்களுக்கு (காங்கிரஸ்) வரலாற்று நிகழ்ச்சி. அமைச்சரவையில் இணையும் இருவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப. சிதம்பரம் கூறுகையில் “தமிழ்நாடு அமைச்சரவையில் இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ராஜேஷ்குமாருக்கும், விஸ்வநாதனுக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.