

முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 20 இடங்களில் இன்று நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.40 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது.
இந்நிலையில் தன்னிடம் இருந்து ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை என எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சோதனை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“தமிழ்நாடு சட்டப்பேரவையில் தி.மு.க மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன்வைக்க முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். முதலமைச்சரிடம் சட்டப்பேரவையில் கேள்வி கேட்டதால் இன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.
2022-ல் கரூரில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து இப்போது சோதனை நடத்துகின்றனர். சம்பந்தமே இல்லாமல் பொறியியல் கல்லூரியில் சோதனை நடத்துகிறார்கள். கல்லூரி மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? சோதனையால் நாங்கள் பயந்துவிடுவோம் என தவெக அரசு நினைக்கிறது.
நாங்கள் மிசாவையே பார்த்த இயக்கம். எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நீதிமன்றம்தான். நான் நிரபராதி என்பதை கட்டாயம் நிரூபிப்பேன். மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயமில்லை. என்னை பொறுத்தவரை பயமில்லை. நான் பரிசுத்தமானவன், எந்தத் தவறும் செய்யாதவன்.
ஒரு பொய்யை பலமுறை கூறுவதால் அதை உண்மையாக்கிவிட முடியாது. நான் நீதிமன்றம் செல்வேன். ரூ.40 லட்சம் கைப்பற்றியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியிருப்பதே வடிகட்டிய பொய். என் வீட்டிலோ, அலுவலகத்திலோ ஒரு பைசா கூட அவர்கள் எடுத்துச்செல்லவில்லை.” என தெரிவித்துள்ளார்.