

அரசியல் விமர்சகர், அப்துல் கலாமின் முன்னாள் உதவியாளர் பொன்ராஜ் சமீபத்தில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது. பேட்டி ஒன்றில் பேசிய பொன்ராஜ் த.வெ.க. பெண் தொண்டர்களை விபச்சாரிகள் என்று விமர்சித்து இருந்தார். இவரது பேச்சுக்கு பெரும் கண்டனங்கள் எழுந்த நிலையிலும், தன் வார்த்தையை திரும்ப பெறவோ, பேசியதற்கு மன்னிப்பும் கேட்க முடியாது என பொன்ராஜ் கூறியிருந்தார்.
பெண்கள் குறித்து இழிவாக பேசிய பொன்ராஜை கண்டித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும், த.வெ.க. தலைவர் விஜய் பொன்ராஜ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய பொன்ராஜை கைது செய்ய வலியுறுத்தி த.வெ.க. தலைவர் விஜய் புகார் மனு அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து புகார் மனு அளித்தார் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய். த.வெ.க.வில் உள்ள பெண்கள் குறித்து தவறாக பேசிய பொன்ராஜை கைது செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் உதவியாளராக இருந்த பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஏ.டி.ஜி.பி.யிடம் த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
த.வெ.க.வில் உள்ள பெண்களை தவறாக குறிப்பிட்டு பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஜய் நேரில் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகார் மனுவை விஜய் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யிடம் வழங்கியுள்ளார்.