

வருகிற மே மாதம் 27 அல்லது 28-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மே மாதம் பொதுவாக பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை ஆகும். இதனால், ரெயில்களில் பயணிகளின் கூட்டம் அதிகளவு இருக்கும். இதுதவிர கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளவும் ரெயில்களில் அதிகம் பயணிப்பது உண்டு.
எனவே, பக்ரீத் பண்டிகை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்து செல்ல விரும்புபவர்கள் நாளை (வியாழக்கிழமை) மே மாதம் 25-ந் தேதிக்கு முன்பதிவு செய்யலாம்.
நாளை மறுநாள் வருகிற மே மாதம் 26-ந்தேதிக்கு முன்பதிவு செய்ய முடியும். ஊருக்கு திரும்ப செல்பவர்கள் மே மாதம் 30-ந் தேதிக்கு வருகிற 31-ந்தேதியும், மே மாதம் 31-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை திரும்ப செல்ல விரும்புபவர்கள் அடுத்த மாதம் 1-ந்தேதி முன்பதிவு செய்யலாம்.
இதன் மூலம் திட்டமிட்டு முன்பதிவு செய்து உறுதி செய்யப்பட்ட இருக்கை டிக்கெட்டுகளை பெற முடியும். தற்போது காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் முன்பதிவு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகளுக்கான இறுதி அட்டவணை 10 மணி நேரத்திற்கு முன் வெளியிடப்படுகிறது. எனவே கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு கூட செய்ய முடியாத நிலையை தவிர்க்கும் வகையில் ரெயில் பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட வேண்டும் என்று ரெயில்வே சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.