ரெயில் பயணிகளை எரித்து கொன்ற ஷாரூக் ஷபிக்கு கோவை கார் குண்டு வெடிப்பில் தொடர்பா?

ஷபியின் செல்போன் எண், வாட்ஸ் அப்பையும் ஆய்வு செய்து வருகிறோம்.ஷாரூக் ஷபி கோவைக்கோ, தமிழகத்தின் பிற பகுதிக்கோ வந்து சென்றாரா? இங்கு யாரையாவது சந்தித்தாரா? என விசாரித்து வருகிறோம்.
ரெயில் பயணிகளை எரித்து கொன்ற ஷாரூக் ஷபிக்கு கோவை கார் குண்டு வெடிப்பில் தொடர்பா?
Published on

கோவை:

கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் நோக்கி கடந்த 2-ந் தேதி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது.

இந்த ரெயிலில் பயணித்த ஒரு குழந்தை உள்பட 3 பயணிகள், ரெயிலில் பயணித்த சக பயணி ஒருவரால் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து, டெல்லியை ஷாகின் பாக்கை சேர்ந்த ஷாரூக் ஷபி (24) என்பவரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்திற்கு பின்னணியில் தீவிரவாத கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் இந்த வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 23-ந் தேதி கோவை கோட்டைமேடு, ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான்.

விசாரணையில், முபின் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர் என்பதும், மக்களை கொல்லும் நோக்கில் காரில் வெடி பொருளை நிரப்பி கார் வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டதும் தெரியவந்தது.

இதேபோல் கடந்த நவம்பரில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்தது. இது தொடர்பாக ஷாரிக் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர் கோவைக்கு வந்து தங்கியதும், இங்கு பல்வேறு இடங்களை நோட்டமிட்டதும் கண்டறியப்பட்டது.

இந்த 2 வழக்குகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சிலரை கைதும் செய்துள்ளனர். தொடர்ந்து இந்த வழக்குகள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் ரெயில் பயணிகள் எரித்து கொல்லப்பட்ட சம்பவமும், கோவை, கர்நாடகாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் என இந்த 3 சம்பவங்களும் ஒரே வகையிலான தாக்குதலாக இருப்பதால், கேரளாவில் ரெயில் பயணிகளை எரித்து கொன்ற வழக்கில் கைதாகி உள்ள ஷாரூக் ஷபிக்கு கோவையில் யாரிடமாவது தொடர்பு உள்ளதா? என கோவை மாநகர போலீஸ் விசாரித்து வருகிறது.

கோவை மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகளால் தென் மாநிலங்களில் பொதுமக்களை குறிவைத்து இதுபோன்ற தாக்குதல் அரங்கேற்றப்படுகின்றன.

ஷாரூக் ஷபி கோவைக்கோ, தமிழகத்தின் பிற பகுதிக்கோ வந்து சென்றாரா? இங்கு யாரையாவது சந்தித்தாரா? என விசாரித்து வருகிறோம்.

சைபர் கிரைம் போலீசார் தொலை தொடர்பு நிறுவனங்கள், இணைய நெறிமுறை விவரப்பதிவு முறை ஆகியவற்றின் மூலம் எங்களது விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். மேற்கண்ட 3 சம்பவங்களுக்கு தொடர்புள்ளதா எனவும் ஆய்வு செய்கிறோம்.

மேலும் ஷபியின் செல்போன் எண், வாட்ஸ் அப்பையும் ஆய்வு செய்து வருகிறோம். அதில் அவர் யார், யாரிடம் எல்லாம் பேசினார். அவர்களுக்கும், இவருக்கும் என்ன தொடர்பு, அவர்களின் பின்புலம் என்ன? கார் வெடிப்பில் கைதானவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுடன் இவர் பேசினாரா? அவர்களுடன் இவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட அழைப்புகளை ஆராய்ந்துள்ளோம். தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். செல்போன் மட்டுமின்றி பிரத்யேக செயலி மூலம் பேசியுள்ளனரா, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்தனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, கேரளா ரெயில் பயணிகள் எரிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஷபிக்கும், கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com