குற்றாலம் அருவிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்த சுற்றுலா பயணிகள்

அருவிக்கரைகளில் இருந்த மங்குஸ்தான், ரம்புட்டான் உள்ளிட்ட கேரள சீசன் பழங்களை ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர். ஐந்தருவியில் கார்கள் மற்றும் வேன்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
குற்றாலம் அருவிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்த சுற்றுலா பயணிகள்
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

இதனால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. வழக்கமாக வார நாட்களில் சற்று கூட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில், நேற்றும், இன்றும் வார விடுமுறை நாட்கள் என்பதால் கூட்டம் குற்றாலத்தில் அலைமோதியது.

இதனால் அருவிகளில் குளிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர். மேலும், அவர்கள் அருவிக்கரைகளில் இருந்த மங்குஸ்தான், ரம்புட்டான் உள்ளிட்ட கேரள சீசன் பழங்களை ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர். இதேபோல் சுடச்சுட கடைகளில் வைக்கப்பட்டு இருந்த மிளகாய் பஜ்ஜி உள்ளிட்டவற்றையும் வாங்கி சாப்பிட்டனர். விடுமுறை நாள் என்பதால் அருவிக்கரைகள் முழுவதும் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது.

குறிப்பாக ஐந்தருவி மற்றும் மெயினருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மெயினருவியில் வாகனங்கள் நிறுத்தும் இடம் வரையிலும் சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்திருந்தனர். ஐந்தருவியில் கார்கள் மற்றும் வேன்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

பழைய குற்றாலம் அருவியில் குடும்பத்துடன் வந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் செண்பகாதேவி அருவி, புலியருவியிலும் மிதமான தண்ணீர் கொட்டியது. அங்கும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com