தொடர் விடுமுறை எதிரொலி: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஒகேனக்கல் பிரதான சாலைகள் மற்றும் வாகன நிறுத்து மிடங்களில் பரபரப்பான சூழல் நிலவியது.
பரிசலில் சென்று மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
பரிசலில் சென்று மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
Published on

தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடன் ஒகேனக்கலுக்கு வருகை தந்தனர். கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்தது.

காலை முதலே வாகனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால், ஒகேனக்கல் பிரதான சாலைகள் மற்றும் வாகன நிறுத்து மிடங்களில் பரபரப்பான சூழல் நிலவியது.

பரிசல் சவாரி

காவிரி ஆற்றின் நடுவே பாறைகளைத் தாண்டி ஆர்ப்பரித்து கொட்டும் நீர்வீழ்ச்சிகளின் இயற்கை அழகை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனர். குழந்தைகள் நீர்வீழ்ச்சியின் காட்சியை ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்ததுடன், பெற்றோர்களும் புகைப் படங்கள் மற்றும் செல்பி எடுத்து தங்களது சுற்றுலா அனுபவத்தை பதிவு செய்தனர்.

ஒகேனக்கல்லின் முக்கிய அம்சமான பரிசல் சவாரிக்கும் அதிக வரவேற்பு காணப்பட்டது. நீர்வீழ்ச்சிகளை அருகில் இருந்து ரசிக்க சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசல் சவாரி மேற் கொண்டனர். மேலும், ஆயில் மசாஜ் செய்து கொண்டு, அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் பாதுகாப்புடன் குளித்து மகிழ்ந்தனர்.

இதுதவிர, முதலை மறுவாழ்வு மையம், வண்ண மீன் காட்சியகம் உள்ளிட்ட சுற்றுலா மையங்களையும் ஏராளமானோர் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

நீர்வரத்து குறைந்தது

இதற்கிடையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 300 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி அது 200 கனஅடியாக குறைந்துள்ளது.

நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் பிரதான அருவிகளில் தண்ணீர் கொட்டும் அளவும் சற்று குறைந்திருந்தாலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குறைந்த நீர்வரத்து காரணமாக பரிசல் இயக்கம் வழக்கம் போல நடைபெற்று வருவதுடன், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக ஆற்றுப்பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

பாதுகாப்பு பணியில்...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததை முன்னிட்டு, காவல்துறையினர் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆற்றுப் பகுதிகளில் பாதுகாப்பு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டனர். தொடர் விடுமுறையின் இறுதி நாளான இன்று மாலை வரை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com