ஓட்டல்கள் மூடலால் சிரமம்: மாமல்லபுரத்திற்கு கியாஸ் சிலிண்டருடன் வரும் சுற்றுலா பயணிகள்

சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு காலி இடங்களில் வாகனத்தை நிறுத்தி அதன் அருகிலேயே தங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள்.
ஓட்டல்கள் மூடலால் சிரமம்: மாமல்லபுரத்திற்கு கியாஸ் சிலிண்டருடன் வரும் சுற்றுலா பயணிகள்
Published on

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் வணிக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, பல்வேறு ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ளது. மேலும் திறந்திருக்கும் ஓட்டல்கள் மற்றும் தெருவோர கடைகளில் குறிப்பிட்ட சில வகை உணவுகள் மட்டுமே கிடைக்கிறது. விலையும் கூடுதலாக வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள், அதிகமாக விலை கொடுத்தாலும் தாங்கள் விரும்பும் உணவை வாங்கி சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து சுற்றுலா செல்ல திட்டமிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கார், பஸ்களில் மாமல்லபுரம் வரும் பயணிகள் தங்களுடைய வாகனங்களில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரை எடுத்து வந்து விடுகிறார்கள். அவர்கள் சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு காலி இடங்களில் வாகனத்தை நிறுத்தி அதன் அருகிலேயே தங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக இது அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து வெளி மாநிலத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளிடம் கேட்டபோது, நாங்கள் அமெரிக்கா-ஈரான் போர் தொடங்கும் முன்பே மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வர திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். மாமல்லபுரத்தில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த விடுதியினர், வணிக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவு ஏற்பாடு செய்து தரமுடியாது எனக் கூறிவிட்டனர்.

எங்கள் பகுதியிலும் இதே நிலைதான். அதனால் நாங்கள் எங்கள் வீடுகளில் இருந்தே கியாஸ் சிலிண்டர்களை கொண்டு வந்து, விரும்பிய உணவை சமைத்து சாப்பிடுகிறோம் என்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com