

நீலகிரி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலையொட்டி அங்கு உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டு இருந்தன.
இதனால் அங்குள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பார்க், காட்டேரி பூங்கா மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா, அவலாஞ்சி, பைன் பாரஸ்ட், பைக்காரா நீர்வீழ்ச்சி, படகு இல்லம் மற்றும் சூழல் சுற்றுலா குழுக்கள் மூலம் நடத்தப்படும் சுற்றுலா தலங்கள் ஆகியவை பூட்டப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருந்ததால் அங்கு வந்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதேநேரத்தில் ஊட்டி படகு இல்லம் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. இதனால் அங்கு பயணிகள் குவிந்து காணப்பட்டனர்.
தொடர்ந்து அங்கு வேலை பார்த்து வரும் தற்காலிக பணியாளர்கள், படகுகளை இயக்கும் பணியில் ஈடுபடுத்தபட்டனர். இதனால் அந்த பணியாளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து அவர்கள் சுழற்சி முறையில் வாக்குப்பதிவு மையத்துக்கு சென்று வாக்களித்து திரும்புவதற்கான நடவடிக்கைகளை சுற்றுலா வளர்ச்சிக்கழகம் செய்து இருந்தது.
இந்த நிலையில் சட்டசபை பொதுத்தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று திறக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, கர்நாடகா பூங்கா ஆகிய சுற்றுலா தலங்களில் பயணிகள் கூட்டம் அதிகாலை முதலே அதிகரித்து காணப்பட்டது. படகு இல்லத்துக்கு திரண்டு வந்திருந்த பயணிகள் கியூ வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்துக்கொண்டு அங்குள்ள படகுகளில் சவாரி செய்து ஏரியின் எழில்சூழ்ந்த இயற்கை பேரழகை கண்டு ரசித்தனர். மேலும் குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, தொட்டபெட்டா காட்சி முனையம், பைன் பாரஸ்ட், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ள சுற்றுலா தலங்களிலும் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களை உற்சாகத்துடன் பார்வையிட புறப்பட்டு சென்ற சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு கேரளம், கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிகபட்ச சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கேரளத்தில் சட்டசபை தேர்தல் முடிவடைந்ததால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர்.
சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாததால், நாங்கள் இங்கு வந்தோம்.
சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருந்ததால் நாங்கள் வேறு வழியின்றி ஊட்டியில் தங்கி இருந்து இன்று சுற்றுலா தலங்களுக்கு செல்ல உள்ளோம்.
நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்களை முன்னறிவிப்பின்றி மூடுவதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.