

தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மதிய நேரங்களில் வெளியில் செல்வதே சவாலாக இருக்கிறது.
கொளுத்தும் கோடை வெயில் காரணமாக மக்கள் குளிர்ச்சியான ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை போன்ற இடங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்தது தற்போது கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறையை இதமாக கழிக்க நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில் இன்று காலையும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள மலர்செடிகளை கண்டு ரசித்து அதன்முன்பு புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள பெரிய புல்தரையில் குடும்பத்துடன் அமர்ந்து பேசியும், குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்து தங்கள் விடுமுறை பொழுதை உற்சாகத்துடன் களித்தனர்.
இதேபோன்று ஊட்டி ரோஜா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்கு பூத்து குலுங்கிய ரோஜா மலர்களை கண்டு ரசித்தனர். ஊட்டி படகு இல்லத்திலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. படகு சவாரி செய்து அங்கு நிலவிய சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர்.
இதேபோன்று தொட்ட பெட்டா மலைசிகரம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், பைன்பாரஸ்ட், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் சுற்றுலா தலங்களை சுற்றியுள்ள கடைகளில் வியாபாரமும் சூடுபிடித்துள்ளது. சுற்றுலா தலங்களையொட்டி கடைகளில் குவியும் மக்கள் அங்கு தங்களுக்கு பிடித்தமான பொருட்களை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் ஊட்டியில் பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். இன்னும் சில வாரங்களில் கோடைவிழா தொடங்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறைக்கும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்தனர். அங்கு வந்த சுற்றுலா பயணிகள் வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். கூழாங்கல் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்கு குறைந்த அளவில் சென்ற தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
வால்பாறை நகரில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகரித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காமராஜர் நகர் பகுதி முதல் அரசு போக்குவரத்து கழக பஸ் நிலையம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்கள் ஊர்ந்து, ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.