‘தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்’ - கிருஷ்ணசாமி!

உண்மைகளை ஒப்புக்கொள்வதில் தவெக அரசு தயங்கக்கூடாது.
‘தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்’ - கிருஷ்ணசாமி!
Published on

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேகதாது விவகாரம், டாஸ்மாக் மூடல், போதைப்பொருள் பரவல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

கிருஷ்ணசாமி பேசியதாவது;

“கர்நாடகத்தில் கட்டப்பட உள்ள மேகதாது அணையை தடுத்து நிறுத்தும் பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கும், தமிழக மக்களுக்கும் உள்ளது. சட்டசபையில் வெறும் தீர்மானம் மட்டும் நிறைவேற்றினால் மட்டும் போதாது. தீர்மானத்தை கர்நாடகா கண்டுகொள்ளாது.

முதலமைச்சர் தலைமையில் போதை ஒழிப்பு மாரத்தான் நடத்தப்பட்டுள்ளது. போதை என்பது வெறும் மாத்திரையில் மட்டும் அல்ல. மதுபோதையும் குடும்பங்களை அழிக்கிறது. விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகளை மூடுவார் எனக்கூறி ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.

போதை என்பதில் மது முக்கியமானது என்பதை முதலமைச்சர் மறந்துவிடக்கூடாது. எனவே தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். 717 டாஸ்மாக் கடைகளை மூடியது என்பது வெறும் கண்துடைப்பு. மனமகிழ் மன்றங்கள் எந்த இடத்திலும் மூடப்படவில்லை.

கடந்த கால மதுவிற்பனை, துளிக்கூட குறையாமல் தற்போதும் தொடர்கிறது. திமுகவைப்போல, இவர்களும் கடைகளை மூடியதுப்போல் காட்டுகின்றனர். விஜய் தலைமையிலான அரசு, எப்போது பூரண மதுவிலக்கை கொண்டுவருவார்கள் என்று காலம் நிர்ணயிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த தவெக அரசு, மதுபானங்களை நிறுத்துவதற்கு கால நிர்ணயம் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

உண்மைகளை ஒப்புக்கொள்வதில் தவெக அரசு தயங்கக்கூடாது. அமோனியா வாயுக்கசிவு விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளனர். பட்டாசு, தீப்பெட்டி, இதுபோன்ற தொழிற்சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு தீவிர நடைமுறைகளை கையாள வேண்டும். தடுப்பபதற்கான வழிகளை ஆராயவேண்டும்.” என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com