

எரிசக்தி துறை சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 383 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடந்தது.
இதில் பங்கேற்பதற்காக வந்த முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர் நிர்மல் குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அரசு அலுவலர்கள் பூங்கொத்துகள் மற்றும் புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் விழா தொடங்கியது. கூடுதல் தலைமை செயலாளரும், மின் வாரியத் தலைவருமான ஜெ.ராதா கிருஷ்ணன் வரவேற்றார். அமைச்சர் நிர்மல்குமார் விளக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
70 ஆயிரம் இடங்கள் சில வாரங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் மின்சாரவாரியம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த துறையில் 70 ஆயிரத்துக்கும் மேல் காலி பணியிடங்கள் இருக்கிறது என்று குறிப்பிட்டேன்.
அதில் 15 ஆயிரம் பணியிடங்களை இந்த வருடத்தில் நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று சொன்னேன். உடனடியாக அரைமணி நேரத்தில் 15 ஆயிரம் பேரை நிரப்புவதற்கான ஒப்புதலை முதல் முறையாக இந்த துறைக்கு கொடுத்துள்ளார்.
எந்த அளவுக்கு சீரழிக்க முடியுமோ அந்த அளவுக்கு கடந்த 25 வருடத்துக்கு மேலாக சீரழிந்து கிடக்கும் இந்த மின்சாரத் துறையை தூக்கி நிமிர்த்துவதற்கான நேரம் வந்து விட்டது. இப்போது விட்டால் இந்த துறையை இனி சீரமைக்கவே முடியாது.
தமிழகத்தில் 4½ லட்சம் டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதில் 25 சதவீதம் டிரான்ஸ்பார்மர்கள் 20 வருடம் பழமையானவை. இது தொடர்பாக முழுமையான வெள்ளை அறிக்கையை வெளியிட உள்ளேன்.
மின்சார துறையில் 50 சதவீதம் காலி பணியிடம் இருந்தால் எப்படி செயல்பட முடியும் என்று உணர்ந்து அன்றைக்கே முதலமைச்சர் விஜய் 15 ஆயிரம் பேரை நிரப்புவதற்கான அனுமதி அளித்துள்ளார்.
இந்த வருடத்தில் மின்சார துறையில் 15 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க போகிறோம். கடந்த 25 முதல் 30 வருடத்தில் இது போன்று இந்த துறையில் நடந்ததே இல்லை.
இப்போது 401 பேரும் அரசு பொறுப்பேற்ற 4 வாரத்தில் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் பணி நியமன ஆணையை தனித்தனியாக நானே கொடுக்க விரும்புகிறேன் என்று முதல்-அமைச்சர் கூறினார்.
இதுதான் புது மாதிரியான அரசு. இப்படித்தான் இந்த அரசு இனி இருக்கும். பெயரளவுக்கு எதையும் முதலமைச்சர் செய்யமாட்டார். சொன்னது எதுவோ அதை கண்டிப்பாக செய்வார். பொதுமக்கள் மற்றும் இங்கு இருக்கின்ற ஊழியர்கள்தான் எஜமானர்கள். மக்களுக்கு பயந்துதான் இந்த அரசு செய்யுமே தவிர வேறு யாருக்கும் பயந்து இந்த அரசு எதையுமே செய்யாது.
இந்த துறையில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதற்கான வேலைகளை முழு வீச்சில் விரைவில் தொடங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பிறகு எரிசக்தி துறையின் செயல்பாடுகள் பற்றி காணொளி காண்பிக் கப்பட்டது.
பின்னர் முதலமைச்சர் விஜய் 383 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். முதலில் அட்சயலட்சுமி என்ற நிறை மாத கர்ப்பிணி பெண்ணுக்கு முதல்-அமைச்சர் விஜய் மேடையில் இருந்து கீழே இறங்கி அவர் இருந்த இடத்துக்கே சென்று பணி நியமன ஆணையை வழங்கினார்.
பின்னர் மற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
பணி நியமன ஆணை களை வழங்கி முடித்ததும் முதலமைச்சர் விஜய், பணி ஆணை பெற்றவர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு சென்றார். அவர்களின் மத்தியில் இருக்கையில் அமர்ந்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.