தற்போது 106: ஆட்சி அமைப்பதற்கான மேஜிக் 118-க்கு த.வெ.க. என்ன செய்யும்?

விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்தால், ஆட்சியமைக்க 13 இடங்கள் தேவை என்பதால் அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 106: ஆட்சி அமைப்பதற்கான மேஜிக் 118-க்கு த.வெ.க. என்ன செய்யும்?
Published on

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஏறக்குறைய 106 தொகுதிகளை கைப்பற்றி முதன்மைக் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை பிடிக்க முடியவில்லை. இதற்கு இன்னும் 12 இடங்கள் தேவை. விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் த.வெ.க. பிடித்த இடங்களில் எண்ணிக்கை 105 ஆகும். இதனால் ஆட்சியமைக்க 13 இடங்களில் தேவை.

தனிப்பெரும்பான்மை கட்சி என்பதால் விஜய், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். ஆளுநர் அழைப்பு விடுத்தால், சட்டசபையில் முதலமைச்சராக பதவி ஏற்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அப்போது, மற்ற கட்சிகள் மறைமுகமாக அல்லது நேரடியாக ஆதரவு கோரலாம்.

13 இடங்கள் தேவை என்ற சூழலில், எந்தக் கட்சிகளிடம் த.வெ.க. ஆதரவை கோரப்போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது. குறிப்பாக, திமுக அல்லது அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கேட்குமா அல்லது நேரடியாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துமா என்பது கவனிக்கப்படுகிறது.

இதற்கிடையே, த.வெ.க. வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம், காங்கிரஸ் கட்சி த.வெ.க.-க்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் 5 இடங்கள், தேமுதிக 1, விசிக 2, மதிமுக 2, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளன.

அதிமுக கூட்டணியில் பாஜக 1, பாமக 5, அமமுக 1 இடங்களில் முன்னிலையில் உள்ளன. இந்த கட்சிகளின் 23 இடங்களில் 13 இடங்களை பெற வேண்டும். இதற்காக அந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை த.வெ.க.-வுக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com