

கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார். கன்னியாகுமரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் மகேசை ஆதரித்து தெங்கம்புதூர் பகுதியில் வாக்கு சேகரித்த அவர், நாகர்கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆஸ்டினுக்கு ஆதரவாக ராஜாக்கமங்கலம் பகுதியில் ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்களை நாகரிகமற்றவர்கள் என்று கூறுகிறார். அமித் ஷா ஒடிசாவில் தேர்தல் நேரத்தில், தமிழன் ஒருவன் அங்கே செல்வாக்குடன் இருப்பதைப் பொறுக்க முடியாமல் தமிழர்களுக்கு எதிராக பேசுகிறார். பூரி ஜெகநாதர் கோவில் சாவி தமிழ்நாட்டுக்கு வந்து விட்டதாக பிரதமர் மோடி பொய் பரப்புரை செய்கிறார். பீகார் தேர்தலில் வட மாநிலத்தவருக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை என பேசுகிறார்.
பொன் ராதாகிருஷ்ணன், தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்று கூறுகிறார். தமிழ் மூத்த மொழி என்பதை உலகம் அறியும், அதற்கு இவர்கள் சான்றிதழ் தேவையில்லை. வெளி மாநிலங்களில் தமிழை பழித்துப் பேசிவிட்டு, இங்கே வந்து தமிழ் பிடிக்கும் என்று நாடகமாடுவதைத் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
மத்திய அரசு தமிழகத்திற்கான ரூ.3,600 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்தபோதும், தொகுதி மறுவரையறை மூலம் தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்கச் சதி நடக்கும்போதும், எடப்பாடி பழனிசாமி வாய் திறக்க மறுக்கிறார். டெல்லி எதைச் சொன்னாலும் ஆமாம் சாமி போடும் அடிமை ஆட்சியைத்தான் அவர் நடத்தினார்.
சசிகலாவின் காலில் விழுந்து பதவி பெற்றுவிட்டு, இன்று அவரையே கட்சிக்குள் சேர்க்க மறுக்கிறார். தன்னுடன் இருந்த ஓ.பி.எஸ்.சை வெளியேற்றினார்.
தன்னைத் தாண்டி கட்சி இருக்கக் கூடாது என்று நினைக்கும் சுயநலவாதி அவர். 2016 தேர்தல் அறிக்கையில் செல்போன் தருவதாகக் கூறி ஒருவருக்குக் கூட வழங்காதவர் எடப்பாடி. பூஜ்ஜியம் மார்க் வாங்கிய அவர், தி.மு.க. தேர்தல் அறிக்கையை காப்பி அடிப்பதாக கூறுவது வேடிக்கையானது.
தமிழக உரிமைகளை காக்கவும், தமிழர்களை இழிவுபடுத்துபவர்களுக்குப் பாடம் புகட்டவும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.